புரட்டாசி பொங்கல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும்  புரட்டாசி பொங்கல் மிகுந்த விமரிசையாக கொண்டாடப் படுகிற‌து.

புரட்டாசி மாதம் இரண்டாம் செவ்வாயன்று பொங்கல் சாட்டி கொடி கட்டப்படும். அடுத்து வரும் மூன்றாம் செவ்வாய் அன்று அக்கினிச் சட்டி எடுக்க நேர்த்திக் கடன் செய்வோர்கள் பொங்கல் சாட்டிய நாளிலிருந்து விரதம் இருக்க வேண்டும். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு காப்பு கட்டப்படும். இதில் எந்த விதமான சாதி சமூக பாகுபாடு இன்றி நடத்தப்படும்.

மூன்றாம் செவ்வாய் மாலை 4 மணிக்கு அக்கினிச் சட்டியில் பூ வளர்க்கப்படும். சுட்ட மண் சட்டியில் பச்சை நெல்லை அரைப்பதன் மூலம் கிடைக்கும் தவிட்டைப் போட்டு அதன் மேல் வேம்பு விறகு இட்டு அதில் சூடன், பத்தி, நல்லெண்ணெய் விட்டு அக்கினி வளர்க்கப்படும்.

நான்கு மணியளவில் அக்கினிச் சட்டி எடுத்து அம்மன் கோவிலில் இருந்து வடக்கு முகமாக நையாண்டி மேளம், இராஜமேளம், கேரளா செண்டை மேளம் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்றவைகளுடன் சிறப்பு ஊர்வலம் நடைபெறும்.

இந்த ஊர்வலம் கோவில் முன்பு வழியாக வடக்கு முகமாகச் சென்று பின் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மேற்கு வழியாக வடக்குத் தெருவில் கிழக்கு நோக்கி மெயின் ரோடு வழியாக ஊராட்சி மன்றம் முன்பு வரும்.

அப்போது அங்கு தயார் நிலையில் இருக்கும் ஆயிரங் கண் பானை, முளைப்பாரி, பூப்பெட்டி ஆகியவைகளை எடுத்து வருபவர்கள் ஊர்வலத்துடன் இணைந்து கொள்வார்கள். ஊர்வலம் காமராஜர் சிலை அருகில் இருந்து தெற்கு நோக்கி திரும்பி கிருஷ்ணன் கோவில் வழியாக தெற்கு தெருவில் நுழையும்.

பின்னர் தெற்குத் தெருவின் மையப் பகுதியில் உள்ள அம்மன் கொண்டாடி அவர்கள் வீட்டிற்கு முன்பாக வரும் பொழுது அம்மன் கொண்டாடி அவர்கள் அக்கினிச் சட்டி, பூப்பெட்டி, ஆயிரங்கண் பானை எடுத்து வருபவர்களுக்கு அருள் செய்து விபூதி வழங்குவார்கள்.

பின் ஊர்வலம் மேற்கு முகமாகச் சென்று கோவிலைச் சுற்றி வலம் வந்து முன் பக்கத்தில் கோவிலுக்குள் சென்று நிறைவுறும்.அன்று இரவு காளியம்மன், மாரியம்மன் உற்சவ மூர்த்திகள் கோபுரச் சப்பரமான பெரிய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

மறுநாள் காலை அம்மன் கொண்டாடி அவர்கள் அழைப்பு மேளதாளத்துடன் செய்யப்பட்டு புனித மஞ்சள் நீராடி கூடியிருப்போர்கள் மேல் புனித மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு புரட்டாசி பொங்கல் இனிதே நிறைவேறும்.

முகவூர் சசிராஜா க.சந்திரசேகர்