புளி – இந்தியப் பேரீச்சை

புளி இந்தியர்களின் உணவில் அன்றாடம் சேர்க்கப்படும் முக்கியப் பொருள். இது மருந்தாகவும், மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதனுடைய தனிப்பட்ட இனிப்பு கலந்த புளிப்புச் சுவை பலரை கவர்ந்திழுக்கவும், சிலரை வெறுக்கவும் செய்கிறது. இங்கு புளி என்று குறிப்பிடப்படுவது பழ வகையாகும்.

அரேபிய மற்றும் பாரசீக வர்த்தகர்கள் புளியினை முதலில் இந்தியாவில் கண்டனர். அவர்களுக்கு புளியானது பார்ப்பதற்கு பேரீச்சைப் போன்று இருந்ததால் இதனை இந்தியப் பேரீச்சை என்று அழைத்தனர்.

 

புளியின் அமைப்பு மற்றும் வளரியல்பு

புளியானது வெப்பமண்டல மரவகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இம்மரமானது 80 அடி உயரத்துடன் பரந்து கிளைத்துக் காணப்படும்.

 

புளிய மரம்
புளிய மரம்

 

இம்மரத்தின் பட்டையானது சொரசொரப்பாக தடிமனாக நீளவாக்கிலும், குறுக்குவாக்கிலும் பிளவுகளுடன் காணப்படும்.

நாட்பட்ட மரத்தில் பிளவுகள் ஆழமாகவும் விரிந்தும் அடர்நிறத்திலும் இருக்கும். நன்கு வளர்ந்த இத்தாவரத் தண்டின் விட்டமானது ஆறடிக்கு மேல் இருக்கும்.

இலைகள் 1.25-1.5 செமீ நீளத்திலும், 5-6 மிமீ அகலத்திலும் கூட்டிலைகளாக காணப்படுகின்றன. இலைகள் முதலில் இளம்பச்சை நிறத்திலும் முதிர்ந்ததும் நீலம் கலந்த அடர் பச்சை நிறத்திற்கு மாறுகின்றன.

 

புளிய இலை
புளிய இலை

 

இத்தாவரத்தில் பூக்கள் வசந்த காலத்தில் தோன்றுகின்றன. இத்தாவர மொட்டுக்கள் அடர் சிவப்பு நிறத்திலும் மலர்ந்ததும் கிரீம் கலந்த வெள்ளை நிறத்தில் சிவப்பு மற்றும் பழுப்பு நிற கோடுகளுடன் இருக்கும்.

 

புளியம் பூ
புளியம் பூ

 

இப்பூக்களிலிருந்து 12 முதல் 15 செமீ நீளத்தில் பச்சைநிற காய்கள் தோன்றுகின்றன. காய்கள் பழுக்கும்போது வெளிப்புற தோலானது காய்ந்து விடுகின்றன.

 

புளியங்காய்
புளியங்காய்

 

பழுக்கும்போது காயிலிருக்கும் நீர்ச்சத்துகள் வற்றி உட்புறம் பிசுபிசுப்பான அடர்ந்த கூழ்போன்ற சதையானது கொட்டைகளைச் சுற்றி காணப்படுகின்றன.

 

புளி
புளி

 

பழத்தின் உட்புற சதைப்பகுதி சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் கொட்டைகள் தட்டையாக அடர்பழுப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும்.

நன்கு வளர்ந்த புளிமரத்திலிருந்து ஓர் ஆண்டிற்கு 175 கிலோகிராம் புளியானது கிடைக்கிறது.

புளியானது வளமான வண்டல் மண்ணிலிருந்து உவர் மற்றும் கடிமான பாறை மண்ணிலும் செழித்து வளரும்.

வறட்சியை தாங்கி வளரும் இயல்புடையது. ஆனால் இதனால் குளிரினைத் தாங்க இயலாது. பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் மட்டும் இதற்கு மழை தேவை.

புளியானது ஃபேபேசி என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் டாமெரின்டஸ் இன்டிகா என்பதாகும்.

 

புளியினைப் பற்றிய வரலாறு

புளியானது வெப்ப மண்டல ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. கேமரூன், சூடான், தான்சானியா, நைஜீரியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளின் காடுகளில் இது முதலில் காணப்பட்டது.

அங்கிருந்து இந்தியாவிற்கு பரவியது. இது இந்தியாவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிர் செய்யப்பட்டிருக்கிறது. ஓமன் நாட்டில் கடற்கரை ஒட்டிய மலைப்பகுதியின் சரிவுப் பகுதிகளில் இது காணப்பட்டது.

மெக்ஸிகோவிற்கு 16-ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய மற்றும் போர்த்துக்கீசியர்களால் புளியானது எடுத்துச் செல்லப்பட்டது.

இது ஆப்பிரிக்கா, தெற்காசியா, ஓசியானியா, வடக்கு ஆஸ்திரேலியா, தைவான், தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா உள்ளிட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.

தற்போது இந்தியா உலகில் புளி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

 

புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

புளியில் விட்டமின் பி1(தயாமின்), பி3(நியாசின்), சி போன்றவை அதிகமாகவும், பி5(பான்டோnனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுக்கள்), ஏ, கே ஆகியவையும் உள்ளன.

இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாகவும், கால்சியம், செம்புச்சத்து, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன.

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகளவும், புரதச்சத்து, பீட்டா கரோடீன் ஆகியவையும் காணப்படுகின்றன.

 

புளியின் மருத்துவப்பண்புகள்

இதய நலத்திற்கு

புளியில் உள்ள நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவினை குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

புளியில் உள்ள பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிசெய்கிறது.

மேலும் இதில் உள்ள விட்டமின் சி-யானது வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடியல்களின் செயல்பாடுகளைத் தடுத்து இதய நலத்தைப் பாதுகாக்கிறது.

 

நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த

புளியில் உள்ள விட்டமின் சி-யானது ஆன்டிஆக்ஸிஜென்டாகச் செயல்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. புளியில் உள்ள நுண்ணுயிர் தடுக்கும் திறன், கிருமி நாசினி பண்பானது நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

 

உடல் வெப்பத்தைப் போக்க

நம் நாட்டில் கோடை காலத்தில்; வெப்பத்தால் உடலில் நீர்இழப்பு உண்டாகிறது. புளியில் தயார் செய்த குளிர்பானம் உடலின் வெப்பத்தைப் போக்கி நீர் இழப்பினைச் சரி செய்கிறது.

 

உடல் இழப்பிற்கு

புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலமானது உடலில் கொழுப்பு சேர்வதைத் தடைசெய்கிறது. இது செரோடொனின் சுரப்பினை அதிகரித்து பசி உணர்வினைக் கட்டுப்படுத்துகிறது. எனவே புளியை அடிக்கடி உண்டு உடல்எடை குறைக்கலாம்.

 

தசைகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு

புளியில் உள்ள விட்டமின் பி1(தயாமின்) நரம்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கிய வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் ஆரோக்கியமான உடல் செயல்பாட்டிற்கு வழிவகை உண்டாகிறது.

 

நல்ல செரிமானத்திற்கு

புளியில் உள்ள டார்டாரிக் அமிலம், பொட்டாசியம் போன்றவை நன்கு உணவினைச் செரிக்கச் செய்கின்றன. புளியானது பித்த நீர் உற்பத்தியைத் தூண்டி செயல்திறன் உள்ள செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறவும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், வயிற்றுப்போக்கினைப் போக்கவும் செய்கிறது.

 

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெற

உடல்வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் புற்றுநோய் உண்டாகிறது. புளியில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தவிர்த்து புற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

 

சருமப் பாதுகாப்பிற்கு

புளியில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்ஸி முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் உருவாவதைத் தடைசெய்கிறது. சூரியனின் புறஊதாத் தாக்கத்திலிருந்தும் புளியானது பாதுகாப்பு அளிக்கிறது.

 

புளியினைப் பற்றிய எச்சரிக்கை

இரத்த உறைதலை தடுப்பதற்காக மருந்தினை உட்கொள்பவர்கள் புளியினை உட்கொள்ளக் கூடாது.

இதனை அதிகமாக உட்கொள்ளும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைக்கிறது. எனவே இதனை அளவோடு உட்கொள்வது நலம்.

இதில் அமிலம் காணப்படுவதால் இதனை அளவுக்கதிகமாக உட்கொள்ளும்போது பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புளியானது ஊறுகாய், ரசம், குழம்பு, சாதம், பானக்கரம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

சிலநேரங்களில் இது அப்படியேவோ, ஜாம், ஜாஸ், இனிப்புக்கள் தயார் செய்யவும், மசாலாப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

புளிய விதையிலிருந்து தயார் செய்யப்படும் எண்ணையானது பொம்மைகளின் மேற்பூச்சுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய பேரீச்சையான புளியை அளவோடு உட்கொண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.