மகிழ்வாய் வாழ‌ வழி

கடற்கரையோரமாக இருந்த அந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காட்டுத் தவளை ஒன்று சந்தோச மிகுதியில் ஆடிப்பாடி துள்ளிக் கொண்டே இருந்தது.

 

“என்னைப்போல இவ்வனத்தில்

சிரித்து மகிழ்பவன் யாருமுண்டோ?

தண்ணீரில் சென்று விளையாடிடுவேன்

தரையிலும் பாடி ஆடிடுவேன்

கண்ணீர் என்பதை நானறியேன்

கவலைகள் இன்றி வாழ்ந்திருப்பேன்

என்னைப் போல வாழ்வதற்கு

விருப்பம் கொண்டவர் வாருங்கள்

வாழ்ந்திடக் கற்றுக் கொள்ளுங்கள்”

 

என்ற தவளை தங்கப்பனின் குரல் கேட்டு அங்கு கரையோரமாக வளை தோண்டி வாழ்ந்து கொண்டிருந்த கடல் நண்டு அன்பழகன் தங்கப்பனை அழைத்தது.

“எனக்கு சந்தோசமாக வாழ்வதற்கான வழிமுறையை நீ கூறுவாயா? என்று கேட்டது.  “நிச்சயமாக கற்றுத் தருகிறேன். இன்னும் வேறு யாராவது இருக்கின்றார்களா?” என சற்று தேடிப்பார்த்தது.

பிறகு என் வீட்டுக்கு அழைத்துச் சென்று சந்தோசமாக வாழ கற்றுக் கொடுக்கிறேன். என்னைப் பின் தொடர்ந்து வா” என்று நண்டு அன்பழகனையும் அழைத்துக் கொண்டு சற்று தூரம் சென்றது. கடற்கரையில் நின்று கொண்டது.

 

“இங்குள்ள நண்டுகளில் எவருக்கேனும்

இன்பமாய் வாழ்ந்திட ஆசையுண்டோ?

என்னைப் போன்றே மகிழ்வாக

வாழ்ந்திட கற்றுத் தருவேனே!

அன்பழகன் நண்டு என்னுடனே

ஆசையுடன் வருவதைக் காணுங்கள்

கண்ணீர் என்பதை அறியாமல்

காலம் முழுவதும் வாழ்வதற்கு

நீங்களும் ஓடியே வாருங்கள்

நல்லதைக் கற்று வாழுங்கள்” என்று பாடியது.

 

தவளை தங்கப்பனின் குரலைக் கேட்டு அங்க கரையோரமாக இருந்த கடல் ஆமை கருங்காலன் “தனக்கு சந்தோசமாக வாழ கற்றுக் கொள்ள ஆசை” என்று கூறி தவளை, நண்டு ஆகியோருடன் சேர்ந்து கொண்டது.

சிறிது நேரம் மௌனமாகவே கழிந்தது. வேறு ஒருவரும் வருவதற்கான அறிகுறி இல்லாததால் இருவரையும் அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த தங்கப்பன் தவளையை

 

“தவளையண்ணா தங்கப்பா

கவலையின்றி நான் வாழ

கற்றுக்கொள்ள எனக்காசை

என்னையும் அழைத்துச் செல்லுங்கள்

நல்லதை கற்றிடச் செய்யுங்கள்” – என்றது

 

யார் தன்னை அழைத்தது என திரும்பிய தவளைக்குத் தண்ணீரில் மீன் முத்தையாவின் முகம் தெரிந்தது.

“நீ தான் என்னை அழைத்ததா? சற்றுப் பொறு! உன்னை எப்படி அழைத்துச் செல்வது என யோசித்து உன்னையும் எங்களுடன் கூட்டிச் செல்கிறோம். என்ற தவளை தங்கப்பன் சற்று யோசித்தது.

பின்னர் அங்கு கரையோரமாக வளர்ந்திருந்த தென்னை மரத்திடம் சென்று “ஒரு தென்னம்பாளை கொடுங்களேன். என் நண்பன் மீனை என் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது” என்று கேட்டதும் தென்னை மரமும் தன்னிடமிருந்த காய்ந்த பாளை ஒன்றை அதற்குக் கொடுத்தனுப்பியது.

பாளையைப் பெற்றுக் கொண்ட தவளை தங்கப்பன் தன் நண்பர்களான நண்டு அன்பழகன், ஆமை கருங்காலன் ஆகியோருடன் தென்னம்பாளையில் நீரை நிரப்பி அதில் மீன் முத்தையாவை வைத்து பல்லக்கு சுமப்பது போன்று சுமந்து சென்றன.

அருகிலிருந்த மலையுச்சியில் தவளையின் வீட்டை அடைந்த உடன் பாளையைக் கீழே வைத்தன. அதில் இருந்த தண்ணீர் கொட்டி விட்டது. அதுவரை அமைதியாக இருந்த மீன் முத்தையா தண்ணீர் இல்லாமல் துடிதுடித்துக் கொண்டிருந்தான்.

இதைக் கண்ட மற்ற நண்பர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று தண்ணீர் கேட்டன. மான் மாயா, கிளி கீதம்மா, குரங்கு குப்பண்ணா என மூவரும் கொடுத்த தண்ணீரில் தொட்டி ஒன்று அமைத்தன. அதனுள் முத்தையாவை விட்டன. நண்பர்கள் நால்வரும் நன்றாக உணவு உண்டு மகிழ்ந்தனர்.

தவளை தன்னிடமிருந்த செய்தியைக் கூறியது.

“நண்பர்களே! தினசரி உழைத்துக் கொஞ்சம் கொஞ்சம் சேமித்துப் பழகினாலே போதும். ஆண்டு முழுவதும் சந்தோசமாகவே வாழ முடியும்”

 

“நல்ல செய்தி சொன்னவனே!

நல்லவன் தவளை தங்கப்பனே!

உன்னைப் போன்றே நாங்கள் இனி

உழைத்துச் சேர்க்க பழகிடுவோம்

உயர்ந்த வாழ்வை வாழ்ந்திடுவோம்

உடனே சென்று நாளைக்காய்

உழைத்திட சென்று வருகிறோம்”

என்று சொல்லிப் புறப்பட்டன.

– இராசபாளையம் முருகேசன்  (கைபேசி: 9865802942)