மட்டன் சுக்கா செய்வது எப்படி?

மட்டன் சுக்கா ஆட்டுக்கறியைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். அசைவப் பிரியர்கள் இதனை விரும்பி உண்பர்.

இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் உண்ண மட்டன் சுக்கா பொருத்தமானது. சுவையான மட்டன் சுக்கா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி  –  ½ கிலோ கிராம்

நல்ல எண்ணெய் – 50 கிராம்

உப்பு   –  தேவையான அளவு

வறுத்து அரைக்க

மல்லி விதை – 4 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 7 முதல் 8 வரை (எண்ணிக்கையில்)

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் ஆட்டுக்கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின் அதனை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நல்ல எண்ணெய் ஊற்றி அதில் மல்லி விதை, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின் மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள மல்லி விதை, சீரகம், மிளகாய் வற்றல், மஞ்சள் பொடி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். தேவையான மசாலா தயார்.

 

ஆட்டுக் கறிக் குழம்பு மசாலா
ஆட்டுக் கறி, மசாலா

 

குக்கரில் நறுக்கிய ஆட்டுக்கறி, மசால் ,தண்ணீர் (தோராயமாக அரை டம்ளர்), தேவையான உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து வைக்கவும்.

 

வேக வைத்த ஆட்டுக்கறி
வேக வைத்த ஆட்டுக்கறி

 

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும்.  கடுகு வெடித்ததும் ஆட்டுக்கறி கலவையை அதனுடன் சேர்க்கவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

 

வேக வைத்த ஆட்டுக்கறியைச் சேர்க்கும் போது
வேக வைத்த ஆட்டுக்கறியைச் சேர்க்கும் போது

 

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும். அவ்வப்போது ஆட்டுக்கறியைக் கிளறி விடவும்.

 

மட்டன் சுக்கா கொதிக்கும்போது
 கொதிக்கும்போது

 

தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

 

இறக்கத் தயார் நிலையில் மட்டன் சுக்கா
இறக்கத் தயார் நிலையில் 

சுவையான மட்டன் சுக்கா தயார்.

 

சுவையான மட்டன் சுக்கா
சுவையான மட்டன் சுக்கா

குறிப்பு

மட்டன் சுக்காவிற்கு எலும்பில்லாத ஆட்டுக்கறியைத் தேர்வு செய்யவும்.

விருப்பமுள்ளவர்கள் மல்லி விதை, மிளகாய் வற்றல், சீரகம், மஞ்சள் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலா பொடி  2½ ஸ்பூன் சேர்த்து மட்டன் சுக்கா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.