மதுரை

மதுரை இந்தியாவில் அமைந்துள்ள 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகத் தொன்மையான நகரம். கூடல் நகர், நான்மாடக் கூடல், கோவில் மாநகரம், திருவிழா நகரம், மல்லிகை நகரம், தூங்கா நகரம், திரு ஆலவாய் என்றெல்லாம் இந்நகரம் அழைக்கப்படுகிறது.

பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையாய் இரண்டும் கலந்து பழம் புதுமையாய் இன்றளவும் மதுரை  சிறந்து விளங்குகிறது. மதுரை மாவட்டத்தின் தலை நகரமாக விளங்குகின்ற இந்நகரம் தமிழ்நாட்டின் 2-வது பெரிய நகரமாகும்.

சென்னை தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் தலைநகராக இருந்தாலும் நெடுங்காலமாக பாண்டியரின் தலை நகரமாக விளங்கிய பெருமை இந்நகருக்கு உண்டு. தமிழ் என்றால் மதுரை. மதுரை என்றால் தமிழ் என்று சொல்கின்ற அளவுக்கு தமிழோடு நெருங்கிய தொடர்பு உடையது இந்நகரம்.

தமிழை வளர்த்த கடைச்சங்கம் இங்கு தான் தோற்றுவிக்கப்பட்டது. மதுரையில் தான் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தான், விஜய நகர பேரரசு, மதுரை நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் மதுரையை ஆட்சி செய்தனர்.

மெகஸ்தனிஸ் என்னும் கிரேக்க நாட்டு தூதர் தமது இண்டிகா என்னும் நூலில் இந்நகரின் கட்டிடகலையும், நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் “கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்” என்று மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சந்திரகுப்த மௌரியரின் அரசவை ஆலோசகரான சாணக்கியர் தனது நூலான அர்த்த சாஸ்திரத்தில் மதுரை பற்றி விவரித்துள்ளார். இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் என்னும் நூலில் தம்ப பன்னி இராச்சியத்தை தோற்றுவித்த விசயன் என்னும் அரசன் மதுரையைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப் படை, சிலப்பதிகாரம் ஆகிய தமிழ் நூல்களிலும் மதுரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நகரில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முன்னால் உள்ள பத்து நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழா சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமையாக திகழ்கிறது.

தைப் பொங்கல் திருவிழாவின் போது நடைபெறும் ஏறுதழுவல் என்னும் சல்லிக்கட்டு நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. இந்நிகழ்ச்சி இவ்வூரின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

இங்கு இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தி தொழில்கள் நடைபெறுகின்றன;  மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காமராஜர் பல்கலைக் கழகம் போன்ற உயர் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன.

சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் இங்கு உள்ளது. இது இந்தியாவில் மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதி மன்றங்களில் ஒன்றாகும்.

 

பெயர் காரணம்

மருத மரங்கள் நிறைந்த பகுதிகளில் உருவான நகர். ஆதலால் இந்நகர் மருதை என அழைக்கப்பட்டு பின் மருவி மதுரை ஆனதாகவும், இந்துக் கடவுளான சிவபெருமானின் சடை முடியிலிருந்து சந்திர கலையின் மதுரமானது நகரின் மீது பொழிந்ததால் மதுரை என (மதுரம் என்றால் இனிப்பு) அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடி கலந்துரையாடல் நடத்தியதால் இது கூடல் மாநகரம் என்ற பெயராலும், திசைக் கொன்றாய் நான்கு வாசற்புறங்களைக் (மாடங்கள்) கொண்டு விளங்கியதால் நான்மாடக் கூடல் என்ற பெயராலும் ஆண்டு முழுவதும் இந்நகரில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதால் திருவிழா நகரம் என்றும், மல்லிகைப் பூ மிகுதியாக காணப்படுவதால் மல்லிகை மாநகர் என்றும், இந்நகரில் நிறைய கோவில்கள் நிறைந்து காணப்படுவதால் கோவில் மாநகர் என்றும், இரவு பகல் என்று பாராது மக்கள் நடமாட்டம் எப்போதும் காணப்படுவதால் தூங்கா நகரம் என்றும், இந்நகரின் எல்லையானது பாம்பினால் (ஆலவாய் என்றால் பாம்பு) வரையறுக்கப்பட்டதால் ஆலவாய் என்றும் அழைக்கப்படுகிறது.

 

நகரமைப்பு

இந்நகரின் நடுவே மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றியே மதுரை மாநகர் கட்டப்பட்டுள்ளது. நகரமானது கோவிலை மையமாக வைத்து நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு மதுரையை ஆண்ட முதல் நாயக்க மன்னனான விசுவநாத நாயக்கரால் சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும்.

நகர வீதிகள் தமிழ் மாதங்களின் பெயர்களான ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன. தமிழ் மாத பெயர் குறிப்பிட்டுள்ள தெருக்களில் அந்த தமிழ் மாதத்தில் விழாக்கள் நடைபெறுகின்றன. நகர மையமும், அதனைச் சுற்றியுள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

 

அமைவிடம்

இவ்வூரானது 9.93º வடக்கு, 78.12º கிழக்கு அமைந்துள்ளது. இது வைகை ஆற்றின் சமவெளிப் பகுதியில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 101மீ உயரத்தில் உள்ளது.

வைகை ஆறானது இந்நகரின் வடமேற்குப் பகுதியில் உள் நுழைந்து தென் கிழக்கு பகுதி வழியே வெளியேறி இந்நகரை இரு சம பகுதிகளாக பிரிக்கிறது. இந்நகரைச் சூழ்ந்துள்ள நகரங்களில் பெரியாறு அணை மூலம் பாசனம் நடைபெறுகிறது.

இங்கு நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. பயறு வகைகள், தானியங்கள், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன.

மதுரை சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. அவை

1.மீனாட்சி அம்மன் கோவில்

2.திருமலைநாயக்கர் மகால்

3.திருப்பரங்குன்றம்

4.அழகர்கோவில்

5.பழமுதிர்சோலை

6.கூடல் அழகர் கோவில்

7.காந்தி அருங்காட்சியகம்

8.கோச்சடை அய்யனார் கோவில்

9.குட்டலாம்பட்டி அருவி

10.புதுமண்டபம்

11.வண்டியூர் மாரியம்மன் கோவில்

12.யானை மலை

13.உலக தமிழ்ச்சங்கம்

14.ஆயிரங்கால் மண்டபம்

 

தொடர்புகள்

இந்நகரானது மற்ற இடங்களுடன் சாலை, இருப்புப் பாதை, மற்றும் விமான போக்குவரத்து மூலம் இணைக்கப்படுகிறது.

 

சாலைப் போக்குவரத்து
இவ்வூரின் வழியாக நான்கு முக்கிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. NH – 7 (வாரணாசி- கன்னியாகுமரி),  NH – 49(கொச்சி – தனுஷ்கோடி),  NH – 45 (திருச்சி – தூத்துக்குடி),  NH – 208 (திருமங்கலம் – கொல்லம்). இங்கு மூன்று முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை

1.மாட்டுத் தாவணி (ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்)

2.ஆரப்பாளையம்

3.பெரியார் பேருந்து நிலையம் ( நகர் பேருந்து நிலையம்)

 

பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்

 

இருப்பு பாதை போக்குவரத்து

மதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இங்குதான் தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களுர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்லம், கோவை, கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகள் உள்ளன.

 

விமானபோக்குவரத்து

மதுரை பன்னாட்டு விமான நிலையம் தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து உள்நாட்டு விமான சேவையும், இலங்கை, மலேசிய மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றிற்கான பன்னாட்டு விமான சேவையும் உள்ளன.

பல நூற்றாண்டுகளைக் கடந்து பல பெருமைகளை தன்னுள் அடக்கி சிறப்புற்று விளங்கும் மதுரை மாநகருக்கு நாமும் ஒரு முறை சென்று அதன் அழகை ரசித்து வருவோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.