மழை நீர் சேகரிப்பு நுட்பங்கள்

மனித இனம் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு நீர் இன்றியமையாததாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வற்றாத நதிகள் மக்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து வந்துள்ளன. பண்டைய காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்குத் தொலை தூரத்தில் வசிக்கும் மக்கள் தோண்டு கிணறுகளில் மழை நீரை சேகரித்து பயன்படுத்தி வந்துள்ள உண்மை பல அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆற்று நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் ஆற்று நீரோடு கிணற்று நீரையும் விவசாயத்திற்கு பண்டைய காலத்தில் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
பெய்யும் மழை நீர் நமக்கு மேற்பரப்பு நீர் மற்றும் நில நீர் வடிவில் கிடைக்கின்றது.

மேற்பரப்பு நீர் ஆறு, வாய்க்கால், ஏரி, குளம், மற்றும் அணைகள் மூலம் பயன்படுத்தப்படுகின்றது. ஏரி, குளம், மற்றும் அணைகளில் சேமிக்கப்படும் நீரின் ஒரு பகுதி (சுமார் 10% முதல் 15% வரை) நிலத்தினுள் பொசிந்து நில நீராக சேமிக்கப்படுகிறது.

பண்டைய காலங்களில் மக்கள், குறிப்பாக இந்தியர்கள் மழை நீர் சேமிக்கும் முறையை அறிந்திருந்தனர் என்பது மொகஞ்சதாரோ, அரப்பா மற்றும் கட்ச் பகுதியில் உள்ள தோலாவிரா ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நீர்த்தட்டுப்பாடு மிகுதியாக உள்ள இராஜஸ்தான் மாநில மக்கள் நீர் மேலாண்மையை முறையாக பயன்படுத்தி மழை நீரை சேமித்து வந்துள்ளனர் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.

தமிழ்நாட்டிலும் பொது பயன்பாட்டிற்காகவும், குடி நீருக்காகவும் ஊருணிகள் அல்லது கிராமக் குளங்கள், மற்றும் கோவில் குளங்கள் அமைத்து மழைநீரை சேமித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் ஆக்கிரமிப்பு மற்றும் பல இதர காரணங்களால் தற்காலத்தில் ஊருணிகள் மற்றும் கிராமக் குளங்களை முழுமையாக பயன்படுத்த இயல்வதில்லை. அதனால் கிராமங்களில் கூட நீர்த்தட்டுப்பாடு தற்காலங்களில் அதிகமாக உணரப்படுகிறது.

நகர்ப்புறங்களில் அதிக அளவில் கட்டிடங்கள் கட்டப்படுவதாலும் நிலத்திற்குக் கீழ் நீர் இறங்கும் நிலப்பரப்பு குறைவதாலும், மழைநீரை சிறிதளவு கூட சேமிக்க இயலாமல் வீணாகிறது.

இந்தியாவின் வட கிழக்கு பகுதியிலும் தென் மேற்கு கோடியில் கேரள மாநிலத்திலும் ஆண்டின் பெரும்பாலான காலங்களில் மழை பெய்கிறது. கேரள மாநிலத்தில் ஆண்டு மழையளவு சுமார் 3000 மில்லி மீட்டர்.

உலகிலேயே மிக அதிக அளவில் வடகிழக்கு இந்தியாவில் “சிரபுஞ்சி”யில் ஓராண்டில் சுமார் 11000 மி.மீ. மழை பெய்கிறது. ஆனால் நீரை முறையாக சேமிக்க வசதி இல்லாமையால் இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தமிழ்நாடு, இராஜஸ்தான், டில்லி, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஓராண்டில் 3 அல்லது 4 மாதங்களில் மட்டும் மழை பெய்கிறது. இக்குறுகிய கால அளவில் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து வைத்தால் மட்டுமே அதனை ஆண்டு முழுவதும் பயன்படுத்த இயலும். இல்லாவிடில் வறட்சி மற்றும் நீர்த்தட்டுப்பாட்டினால் மக்கள் இடர்ப்பட நேரிடும்.

 

மழைநீர் சேகரிப்பு முறைகள்;:

மழை நீரை இருவழிகளில் சேகரிக்கலாம்.

1, கொள் கலன்களில் சேமித்தல்

2, நிலத்திற்கு அடியில் சேமித்தல்

 

1, கொள் கலன்களில் சேமிப்பு

• ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடங்களில் இம்முறை மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது.

• கிராமங்களில் மழை நீர் சேகரிக்கும் எளிய முறைகள் பின்வரும் படங்களில் விளக்கப்பட்டுள்ளன.

• நில மட்டத்திற்கு மேல் தொட்டிகளில் சேகரித்தல்

• நிலத்திற்கு அடியில் பொதுவான பெரிய தொட்டி அமைத்து ஒரு வீதியில் உள்ள அனைத்து வீட்டுக் கூரைகளிலிருந்து வாய்க்கால் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி சேகரிக்கலாம்.

• ஏற்கனவே உள்ள கிணறுகளின் அருகில் வடி அடுக்கு அமைத்து மழை நீரை வடித்து கிணறுகளில் விட்டு சேமிக்கலாம்.

வடிஅடுக்கின் விவரம்: மேல் அடுக்கு மணல் – 150 மி.மீ. முதல் 200 மி.மீ வரை உயரம் – நடு அடுக்கு – சிறு கற்கள் – 200 மி.மீ. உயரம்; கீழ் அடுக்கு – சரளைக் கற்கள் / கூழாங்கற்கள் – 500 மி.மீ. உயரம்.

இம்முறையில் மழைநீர் சேமித்தலில் ஏற்படும் சிரமங்கள்:

• 3 அல்லது 4 மாதங்கள் பெய்யும் மழை நீரை ஆண்டு முழுவதும் பயன்படுமாறு சேகரித்திட மிகப் பெரிய அளவிலான நீர்த்தேக்கத் தொட்டிகள் தேவைப்படும். அதற்கு மிகுந்த பொருட் செலவாவதுடன் நடைமுறைக்கும் ஒத்துவராது.

• நாளடைவில் இவ்வாறு சேகரிக்கப்படும் நீரின் தரம் கெட்டு குடிநீர் மற்றும் பிற புழங்கல்களுக்கு பயன்படுத்த உபயோகிக்க இயலாததாகிவிடும்.

• நீர் ஆவியாதல் போன்றவைகளால் நீர் இழப்பு ஏற்பட்டு பயன்படும் நீரின் அளவு குறையும். எனவே நிலத்திற்கு அடியில் நீரை சேமித்து வைக்கும் முறையை கையாளலாம்.

 

இதன் நன்மைகள்:

• நீரை சேமிக்க தனியாகத் தொட்டிகள் தேவைப்படாது. நிலத்தடி நீர் நிலைகளில் நீரை சேமிக்க முடியும்.

• குறைந்த செலவில் மிகுந்த அளவில் நீரைச் சேமிக்க இயலும்.

• ஆவியாதல் போன்ற நீர் சேதாரங்கள் குறைவு.

 

குறைபாடுகள்:

• கால இடைவெளி விட்டு மழை பெய்யும் காலங்களில் மட்டுமே இம்முறையில் சிறந்த வகையில் நீரைச் சேமிக்க முடியும்.

• தொடர்ச்சியாகவும் அதிக அளவிலும் மழை பெய்யும் காலங்களில் நிலத்தில் ஈரப்பதம் மிக அதிகமாக இருப்பதால் இம்முறை பயன் அளிக்காது. (அதிக நீரை மண் உறிஞ்சாது) மேலும் எல்லாக் காலங்களிலும் மழை நீர் முழுவதையும் சேமித்து வைப்பது என்பது முடியாததும் இயற்கைக்கு மாறானதும் ஆகும்.

• நிலத்தின் மண்ணின் பொசியுந்த தன்மைக்கு ஏற்ப நிலத்தடி நீர் உட்புகும் / உறிஞ்சும் வீதம் மாறுபடும். எனவே மழை நீரில் சுமார் 80% நீரோடையில் செல்வதைத் தவிர்க்க இயலாது.

 

2, நிலத்திற்கு அடியில் நீர் சேமிப்பு

அ.நிலத்தடி நீர்ப் பெருக்கத்திற்கு இம்முறையைப் பயன்படுத்தலாம்.

ஆ.கால இடைவெளி விட்டு மழை பெய்யுமிடங்களில் மழை நீரை மிகுந்த அளவில் சேமிக்க இயலும்.

இ. நீர்த்தட்டுப்பாட்டை பெரும் அளவில் குறைக்க இது வழிவகை செய்கிறது.
கீழ்க்கண்ட முறைகளில் நிலத்தடியில் நீரை சேமிக்கலாம்.

• கூரை மேற்பரப்பிலிருந்து மழைநீர் சேமிப்பு (தனி வீடு)

• தூர்ந்து போன கிணறு அல்லது குழாய்க் கிணறு மூலம் சேமிப்பு

• பழுதடைந்து பயன்படாத அமைப்புகள் மூலம் சேமிப்பு

• துளைக் கிணறுகளுடன் கூடிய கால்வாய் / நீள் குழிகள் மூலம் சேமிப்பு

• மிகச் சிறு சுவர் அணைகளை நீரோடைகளின் குறுக்கே கட்டுவதன் மூலமாக சேமிப்பு

• கசிவு நீர்க் குட்டைகள் மற்றும் ஏரிகள் மூலம் சேமிப்பு

 

வீட்டின் கூரையிலிருந்து மழைநீர் சேகரித்தல்:

சிறப்பாக நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் புற வீடுகளில் குறைந்த அளவில் சேமிக்கும் மழைநீர் கோடைக் காலங்களில் நீர்த்தட்டுப்பாட்டை பெருமளவில் குறைக்கும்.

ஒரு வளாகத்தில் பல கட்டிடங்கள் இருப்பின் மழை நீர்க் குழாய்களை ஒருங்கிணைத்து பலநீர் நிரப்புக்குழிகள் அல்லது கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைப் பெருக்கலாம். வீட்டின் கூரை மேற்பரப்பில் பெய்யும் மழை நீரை சேகரிக்கும் எளிய முறை பின்வரும் படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

மழை நீர் சேமிப்பு அமைப்பதற்கு ஆகும் உத்தேச செலவு விவரங்கள்

1. தனி வீடு (சுமார் 100 ச.மீ. பரப்பு) நீர்நிரப்புக்குழி அமைப்புடன் : ரூ.5,000

2. பன்மாடி கட்டிடம் (20மீ ஒ 30 மீ) நீண்ட நீர்நிரப்புக்குழி அமைப்புடன் (வீட்டைச் சுற்றி நீள் குழியின் அளவு (அகலம் 1 மீ. X ஆழம் 1.5 மீ) : ரூ.75,000

3. பல கட்டிடங்கள் கொண்ட வளாகம், நீர் உட்புகுத்தும் கிணறு அமைப்புடன் கிணறு 1.5 மீ. விட்டம் ஒ 5 மீ. ஆழம் குழாய் கிணறு 150 மி.மீ. விட்டம் 10 மீ. ஆழம் : ரூ.1,85,000

4. அலுவலகக் கட்டிட வளாகம் தோண்டு மற்றும் குழாய்க் கிணறு 1.5 மீ. விட்டம் X 1 மீ. ஆழம் தோண்டு கிணறு, குழாய் கிணறு 250 மி.மீ. விட்டம் X 10 மீ. ஆழம். : ரூ.80,000

4. சேகரிக்கும் மழை நீர் அளவு விபரம் – ஒரு பொருளியல் கணக்கு

கூரை மேற்பரப்பின் அளவு = 100 ச.மீ.

ஓராண்டில் பெய்யும் மழையின் அளவு = 1100 மி.மீ. (அ) 1.10மீ.

பெய்யும் மழையில் 80% சேமிக்கலாம். இதில் மண்ணில் நீர் உறிஞ்சும் தன்மைக்கேற்ப சேமிக்கலாம் எனக் கருதினால் ஓர் ஆண்டில் சேமிக்கும் நீரின் அளவு = 100 X 1.1 X 0.7 X 0.8
= 61.60 க.மீ. அல்லது 61600 லிட்டர்

இந்த அளவு 5 பெரியவர்கள் உள்ள குடும்பத்தின் ஆண்டு உணவு மற்றும் குடிநீர்த் தேவiயின் இருமடங்கிற்கு மேல் (ஒரு நபரின் குடிநீர்த் தேவை ஒரு நாளுக்கு சராசரியாக 15 லிட்டர்) 5000 லிட்டர் குடிநீரின் இன்றைய விற்பனை விலை (சராசரியாக) = ரூ.500
61600 லிட்டர் நீரின் மதிப்பு = ரூ.6160

மழைநீர் சேமிப்பு அமைப்பின் செலவு (தனி வீட்டிற்கு) = ரூ.5000

மழை நீர் சேமிப்பு அமைப்பின் ஆயுள் 5 ஆண்டுகளாக இருப்பினும் முதல் ஆண்டிலேயே அதன் செலவுத் தொகையைவிட கூடுதலான மதிப்பில் நீரைச் சேமிக்க இயலும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

 

கசிவு நீர் குட்டைகள்

கசிவு நீர்க்குளங்கள் அல்லது ஏரிகளை குறைந்த ஆழமுள்ள பாசன ஏரிகளாகக் கருதலாம். நீரோடை அல்லது வாய்க்காலை திசை திருப்பி, வாய்ப்புள்ள இடங்களில் கசிவு நீர்க் குட்டைகள் அமைக்கப்படுகின்றன. இக்குட்டைகளின் கொள்ளளவுக்கு மேல் உள்ள மிகுதியான நீர் உபரி நீர்ப் போக்கியின் மூலமாக நீரோடைக்கு திருப்பி அனுப்பப்படும்.

ஓரளவு சம தளமாக உள்ள கசிவுத் தன்மையுடன் கூடிய நிலப் பகுதிகள் கசிவு நீர்க்குட்டை / ஏரிகள் அமைக்க தகுதி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. தூர்ந்து போயுள்ள பாசன ஏரிகள் மற்றும் குளங்களை கசிவு நீர்க்குளங்களாக மாற்றி பயன்படுத்த இயலும்.

நிலத்தின் நீர்க்கசிவுத் தன்மை அதிகமாக இருப்பதால் ஆவியாதல் முதலிய நீர்ச்சேதாரங்கள் பெருமளவில் குறையும். கசிவு நீர்க்குளங்களின் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் உயரும். கசிவு நீர்க் குளத்தின் அமைப்பு பின்வரும் படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

• நிலநீர் மட்டம் உயர்வு

• ஏற்கனவே உள்ள கிணறுகளில் நீர்ப்பெருக்கம்

• வீடுகளில் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

• தண்ணீரின் உப்புத்தன்மை, மாசுபடுதல் குறைதல்

• அதனால் நீரின் தரம் மிகுதல்

• நிலத்தின் ஈரப்பதம் மிகுதல்

• தாவரங்கள் வளர்ச்சி, அதன் மூலம் பசுமைப் புரட்சி

• நிலத்தினுள் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்படுகிறது.

• மண் அரிப்பு கூடியவரை தடுக்கப்படுகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.