சாதனைச் சிகரம் மாரியப்பன் தங்கவேல்

மாரியப்பன் தங்கவேல் 2016 ரியோ பாராலிம்பிக்கில் இந்திய நாட்டிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த தமிழன். பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியன் என்ற பெருமை இவரைச் சாரும்.

இவர் இந்தியாவின் மாற்றுத்திறனாளி உயரம் தாண்டும் விளையாட்டு வீரர். பாராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையைச் செய்துள்ளார்.

வறுமையான சூழலிலும் கடுமையாகப் போராடி இந்தியாவிற்கு பதக்கம் பெற்றுத் தந்த இவரைப் பற்றி பார்ப்போம்.

 

பிறப்பு மற்றும் இளமைக் காலம்

மாரியப்பன் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஓமலூரை அடுத்த பெரியவடக்கம்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவர் 28.06.1995-ல் பிறந்தார்.

இவரது பெற்றோர் தங்கவேல் மற்றும் சரோஜா ஆவர். இவருக்கு சுதா என்ற மூத்த சகோதரியும், குமார், கோபி என இரு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது தாயார் காய்கறி விற்பவர்.

இவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது பள்ளி செல்கையில் மாநிலப் பேருந்து வலது காலில் மோதியதில் வலது முட்டியில் கீழ் உள்ள பகுதி சிதைந்து விட்டது. இந்நிகழ்ச்சி இவரை நிரந்தர மாற்றுத்திறனாளியாக்கி விட்டது.

ஆனாலும் மனம் தளராத இவர் விளையாட்டுப் போட்டிகளில் சிறுவயது முதலே ஆர்வம் காட்டினார்.

 

தடகளவீரராக மாறுதல்

பள்ளிப்பருவத்தில் இவர் முதலில் கைப்பந்து ஆடிவந்தார். பின் இவருடைய விளையாட்டு ஆசிரியரின் அறிவுரையின்படி உயரம் தாண்டுல் விளையாட்டு பயிற்சியை மேற்கொண்டார். அதில் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

இவருக்கு பதினான்கு வயதாக இருக்கும்போது நல்ல உடல்நிலை உள்ளவர்களுடன் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

2013-ல் நடைபெற்ற அனைத்திந்திய பாராவிளையாட்டு வீரர் சேம்பியன்சிப் போட்டியில் சத்தியநாராயணாவால் அடையாளம் காணப்பட்டார்.

2015 முதல் சத்தியநாராயணாவிடம் பயிற்சி பெற்றார். 2015 –ல் ஐடபிள்யூஏஎஸ் ஜீனியர் உலகப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.

பின் 2016 மார்ச்சில் தூனிசியாவில் நடைபெற்ற ஐபிசி கிராண்ட் பிரி போட்டியில் பங்கேற்று 1.78மீ உயரம் தாண்டி பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இப்போட்டியில் இவர் தங்கம் பெற்றார்.

2016 ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்று 1.89மீ உயரம் தாண்டி தங்கத்தை தன் வசம் ஆக்கினார். இதற்கு முன் பாராலிம்பிக்கில் 1972-ல் முரளிகாந்த் பெட்கர் என்பவர் நீச்சலிலும், 2004-ல் தேவேந்திர ஜஜாகாரியா ஈட்டி எறிதலிலும் தங்கம் பெற்றனர்.

2016 ரியோவில் தங்கம் வென்றதற்காக தமிழக அரசு இவரைப் பாராட்டி இவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வழங்கியுள்ளது.

தனக்கு அறிவிக்கப்படும் பரிசுத் தொகையிலிருந்து மாரியப்பன் தான் படித்த பள்ளிக்கு மூன்று இலட்ச ரூபாயினை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் பரிசுத் தொகை வழங்கியுள்ளது.

ரியோ 2016 பாராலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது மாரியப்பன் இந்திய தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு வீரர்களை வழிநடத்திச் செல்வார் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கு மாரியப்பனின் விளையாட்டுத்திறன் ஒரு சிறந்த உதாரணம். உடலில் குறையிருந்தாலும் உள்ளத்தில் ஊக்கத்துடன் வெற்றி பெற்ற மாரியப்பன் தங்கவேல் சாதனைச் சிகரம் என்பதில் ஐயம் இல்லை.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.