மாவுக்கட்டு – சிறுகதை

சண்முகத்திற்கு வரன் பார்த்த எண்ணிக்கை, பெண் பார்க்கும் படலம் எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்குப் போய் விட்டது.

காரணம் அவனுடைய கரடுமுரடான தோற்றம், முன் வழுக்கை, வீரப்பன் மீசை, சிவந்த கண்கள் இவையெல்லாம் அந்த பெண்களுக்கும், அவன் செய்யும் மத்திய போலீஸ் வேலை அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கும் பிடிக்கவில்லை.

எப்படியோ கடவுள் புண்ணியத்தில் தூரத்து சொந்தமான இந்த லாவண்யா கல்யாணத்திற்குச் சம்மதித்து விட்டாள்; நிச்சயதார்த்தாமும் நடந்தேறி விட்டது.

அன்றிலிருந்து சண்முகத்துக்கு லாவண்யா ஒரு வானத்து தேவதையாக, வறண்ட பாலைவனத்தில் கிடைத்த நீரூற்றாக தெரிந்தாள்.

எத்தனை கேலி, எத்தனை கிண்டல், எத்தனை அவமானம், எத்தனை நிராகரிப்புகள்! எல்லாவற்றிற்கும் லாவண்யா முற்று புள்ளி வைத்து விட்டாள்.

லாவண்யாவால் இப்போது சண்முகத்திடம் நிறைய மாற்றம்.

தன் சிவந்த கண்களுக்கு வைத்தியம் பார்த்து சரி செய்து கொண்டு விட்டான்.

தன் கடா மீசையை வெட்டி சுருக்கி ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமி போல் அழகான மீசை வைத்துக் கொண்டான்.

அதிக முடி வளர்த்து முன் வழுக்கையை மறைத்து கிட்டத்தட்ட “சாக்லேட் பாய் ” ரேஞ்சுக்கு சண்முகம் மாறிவிட்டான். எல்லாம் லாவண்யாவின் உத்தரவு.

கல்யாண தேதி நெருங்கி விட்டது. மத்தியப் போலீசில் விடுப்பு எடுப்பது இன்னொரு நாட்டுடன் போர் தொடுப்பதற்குச் சமம்.

தன் சொந்தக் கல்யாணத்திற்குகூட, நீ போய்த்தான் ஆக வேண்டுமா? என்று கேட்பார்கள். விடுப்பு கிடைப்பது என்பது ஒரு பெரிய சாதனை.

எப்படியோ ஒரு மாதம் விடுப்பு வாங்கி விட்டான் சண்முகம். 15 நாள் கல்யாண வேலைக்கும், கல்யாணத்துக்கு அப்புறமும் 15 நாள் என்று முடிவாகி வீட்டுக்கு வந்து விட்டான்.

சண்முகத்தின் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். சண்முகம் கடைக்குட்டி, இரண்டு அண்ணன்கள், அண்ணிமார்கள், குழந்தைகள், சண்முகத்தின் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, பாட்டியின் அம்மா, அவ்வபோது வந்து செல்லும் மூன்று தமக்கைகள் என ஒரு பெருங்கூட்டம் அந்த வீட்டில் வசிக்கிறது.

சண்முகம் ‍லாவண்யா திருமணம் இனிதே நடந்தேறியது. ஆனால் இந்தப் பதினைந்து நாள் வாழ்க்கை சண்முகத்துக்குப் போதுமானதாக இல்லை.

லாவண்யாவிடம் மனம் விட்டுப் பேசவோ பழகுவோ வாய்ப்பே கிடைக்கவில்லை.

வாசலில் இரண்டு பேர், கொல்லையில் இரண்டு பேர், திண்ணையில் இரண்டு பேர் என எப்போதும் இவர்களைச் சுற்றி மனிதர்கள் இருந்து கொண்டே இருந்தார்கள்.

லாவண்யா சண்முகத்திற்குக் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கனியாகவே இருந்தாள்.

அந்த 15 நாட்களும் ஒரு வினாடி போல் கடந்து விட்டது. ரயில்வே ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வந்த லாவண்யாவின் கண்களில் பார்த்த ஏமாற்றம், ஏக்கம், சொல்ல முடியாத உணர்வுகள் எல்லாம் சண்முகத்தை வழி நெடுகிலும் வாட்டி எடுத்தது.

சண்முகம் வேலை செய்யும் மத்திய போலீசின் முகாம் கொல்கத்தாவின் மைய பகுதியில் இருந்தது.

சண்முகம் இந்தக் கேம்பில் ஓர் ஆண் அன்னை தெரசா. அவன் முரட்டு உருவத்திற்கும், அவன் உள்ளத்திற்கும் சம்பந்தேமே இல்லை.

யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களைக் கவனித்து கொள்வது, ரசம் வைத்துத் தருவது, அவர்கள் துணிகளை துவைத்து தருவது என யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்பவன்.

அதே போல் அவனுக்காக அந்த முகாமே உருகும்.

புதுமாப்பிள்ளைக்குரிய எந்தத் துள்ளலும் இல்லாமல் மிகச் சோர்வாக வந்து சேர்ந்த சண்முகத்தை நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

கதையை கேட்டு அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனுக்கு மேலும் இரண்டு மாதம் விடுப்பு வாங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்கள்.

விடுப்பு வாங்குவது அத்தனை எளிதல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆத்தா செத்து போனாலும், பாட்டி செத்து போனாலும், ஏன் அப்பா அம்மாவே செத்து போனாலும் விடுப்பு தர மாட்டார்கள்.

ஆனால் சண்முகத்தின் முகவாட்டம் அங்கு யாருக்கும் இஷ்டமில்லை.

எப்படியாவது விடுப்பு எடுக்க வேண்டும் அதற்கு ஒரே வழி, மாவுக்கட்டு வைத்தியமும், அதனை தொடர்ந்த இரண்டு மாத மெடிக்கல் லீவும் தான் என்று நண்பர்கள் கூடி முடிவு செய்தார்கள்.

கையில் எலும்பு முறிந்து விட்டால், அது கூடுவதற்காக சின்ன பிளேட் வைத்து, மாவு பசை கலக்கி அதை கையில் மெழுகி, வெள்ளை பேண்டேஜ் துணி கொண்டு கட்டி அந்தக் கையைக் கழுத்தில் தொங்க விட்டு விடுவார்கள்.

இரண்டு மாதம் வரை அவிழ்க்காமல் இருக்க வேண்டும். உடைந்த எலும்பு கூடிவிடும். இதை நம்ம ஊரில் புத்தூர் கட்டு என்று சொல்வார்கள்.

கொல்கத்தாவின் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஒரு சிறிய சந்தில் வைத்திய சாலை இருக்கிறது.

அங்கு மெடிக்கல் லீவு வாங்க அல்லது வேறு ஏதேனும் ஏமாற்று வேலை செய்யப் பணம் வாங்கிக் கொண்டு உடையாத கைக்கும் தத்ரூபமாக கட்டு போட்டு, அதற்கு பொருத்தமான எக்ஸ்ரேயையும் தந்து விடுவார்கள்.

பின்பு வேலை முடிந்தவுடன் அவர்களே அவிழ்த்து துடைத்துத் தந்து விடுவார்கள்.

சண்முகம் திட்டமிட்டபடி மாவுக்கட்டு போட்டு இரண்டு மாத மெடிக்கல் லீவ் வாங்கி ஊருக்கு கிளம்பி விட்டான். மிஷன் சக்ஸஸ்.

ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், கட்டை அவிழ்க்க வேண்டும். உடனே ஹௌரா எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும். நண்பர்கள் பரபரத்தார்கள்.

எல்லாம் சரியாக நடந்தால் எப்படி? சண்முகம் போனபோது அந்தக் கிளினிக் மூடிக் கிடந்தது. ஹௌரா எக்ஸ்பிரஸ் கிளம்ப தயாராகி விட்டது.

நண்பர்கள் யோசனை படி மாவுக்கட்டை சென்னையில் போய் அவிழ்க்க முடிவாகி, சண்முகம் மாவுக்கட்டு உடனேயே ரயில் ஏறிவிட்டான்.

மூன்று நாள் பயணத்தில் சண்முகத்திற்குச் சக பயணிகளால் ஏகப்பட்ட கவனிப்பு, கரிசனம். எல்லாம் இந்த மாவுக்கட்டு செய்யும் மாயம்.

சென்னை சென்ட்ரலில் மாமனார் வரவேற்க வந்து விட்டார். மாப்பிளையின் நிலையை பார்த்து பதறி விட்டார். சண்முகம் சிரிப்பதா அழுவதா நிலையில் தவித்து கொண்டிருந்தான்.

இவரை யார் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டார்கள்? இப்போது மாவுக்கட்டை எங்கு, எப்படி அவிழ்ப்பது?

மாவுக்கட்டு அவிழ்க்காமலே காரில் திண்டிவனம் பயணம் தொடர்கிறது.

லாவண்யாவின் அப்பா காதில் வைத்த நோக்கியா போனை எடுக்கவில்லை. சண்முகத்தின் கை ஒடிந்த விஷயம் காட்டு தீ போல் சொந்த பந்தங்களிடம் பரவியது.

வீட்டுக்குப் போனதும் ஒரே கூட்டம், கூச்சல், சத்தம், களேபரம். சண்முகம் உண்மையை சொல்ல நினைத்தாலும் ரொம்ப வெட்கமாய் இருந்தது.

இந்த பாதுகாப்பு படை வேலை, அதில் இருக்கும் சிக்கல், விடுப்பு வாங்க செய்யும் சித்து வேலைகள் எல்லாம் இங்கு இருக்கும் திண்டிவனத்தைத் தாண்டாத யாருக்கும் புரியப் போவதில்லை.

இது பொய்க்கட்டு என்று தெரிந்தால், லாவண்யா குடும்பம் என்ன சொல்லும்? மாப்பிள்ளை இன்னும் இது போல் எவ்வளவு பொய் சொல்பவரோ என்று கணக்குப் போடும். ஆனால், லாவண்யாவிடம் கட்டாயம் சொல்லி விட வேண்டும்.

இரவு வரை காத்திருந்து அவளிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டான். மிகவும் உடைந்து போய் விட்டாள், தன்னைத் திருமணம் செய்ததால்தான் இப்படி என்று நொந்து நொறுங்கினாள்.

‘என்னைப் பார்க்கதான் இத்தனை நாடகமா, என் மீது அவ்வளவு காதலா?’ என்று கண்ணீரும் சிரிப்புமாய் லாவண்யா அவன் மடியில் கிடந்தாள்.

‘நானும் உன்னைப் பார்க்கத் துடித்துக் கொண்டுதான் இருந்தேன், என் இனிய புருஷனே’ என்று உச்சி முகர்ந்தாள்.

இருவரும் ரகசியம் காப்பதாய் முடிவு எடுத்தார்கள்.

லாவண்யாவை சமையலறைப் பக்கமே வர வேண்டாம் என்றும், சண்முகத்திற்கு பணிவிடை செய்வதே முழு நேர வேலை என்றும் சண்முகத்தின் குடும்பம் பிரகடனம் செய்தது.

சண்முகம் லேசாக இருமினால் கூட லாவண்யாவை உடனே போய் பார்க்க சொல்லி அத்தனை பேரும் ஒரே சமயத்தில் கத்துவார்கள்.

சண்முகம் சில சமயம் வேண்டுமென்றே சேட்டைகள் செய்து, நடித்து லாவண்யாவை எப்போதும் அருகில் இருக்கும்படி செய்வான்.

லாவண்யா உண்மையைச் சொல்லப் போவதாக மிரட்டுவாள். அவன் பணிவான். மாறி மாறி விளையாடிக் கொண்டார்கள்

லாவண்யா தன் கணவனை நினைத்து ரொம்பவும் சந்தோஷப்பட்டாள்.

அவனின் வேலை, அதைப் பற்றிய கதைகள், அவன் நண்பர்கள், துப்பாக்கி எப்படிச் சுடுவது, சல்யூட் எப்படி அடிப்பது என்று அவனோடு பேசி பேசி மகிழ்ந்தாள்.

அவள் முகத்தில் தெரியும் குதூகலத்தைப் பார்த்து சண்முகத்தின் குடும்பம் “பார் கட்டிய புருஷன் கை ஒடிந்து கிடக்கிறான், இவளுக்குக் கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?” என்று முணுமுணுக்க ஆரம்பித்தது.

இருவருக்கும் இது திண்டிவனமா? தேவலோகமா? என்று தெரியாத வண்ணம் இரண்டு மாத வாழ்க்கை கழிந்தது.

பெரும் மன நிறைவுடன் சண்முகம் கொல்கத்தா வந்தடைந்தான்.

அதே கிளினிக்கில் போய் மாவுக் கட்டை அவிழ்த்தான், 50 ரூபாய் டிப்ஸ் கேட்ட கம்பவுண்டருக்கு 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.

முனைவர் க. வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

7 Replies to “மாவுக்கட்டு – சிறுகதை”

  1. மீண்டும் ஒரு நல்ல முயற்சி…. நகைப்பூட்டும் கதையானாலும் நமக்கு “காவல் படையினருக்கும் காதல் அன்பு உள்ளது” என்று நினைவூட்டும் உன்னதமான கதை. நல்ல கதைக்கான காத்திருப்பு நேரம்…

  2. மாவுக்கட்டுகார‌ருக்கு சல்யூட் வைக்க நினைத்த போது, என் கையில் கட்டுப் போட்டது போல ஒரு உணர்வு.

    ஒரு ராயல் சல்யூட்!

    தேசத்திற்கும் தேசத்தை ஒருங்கிணைக்கும் குடும்பத்தின் காதலர்களுக்கும்….

    நாட்டையும் காத்து வீட்டையும் காத்து நாடோடி காதலர்களாய்….

  3. மாவு கட்டு ரகசியம் காப்பது போல புன்னகையும் காக்கப்படுகிறது.

    ஒரு படைப்பாளி எப்பொழுது வெற்றி அடைகிறான் என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி.

    தொடர்ந்து சூட்சும முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க படுவதைப் போலவே இருக்கிறது.

    படைப்பின் ரகசியத்தை சரியாக கை கொண்டு விட்டீர். இனி ஏறுமுகம்தான்.

    சண்முகமும், லாவண்யாவும் பேசிக்கொள்ளும் அந்த களியாட்டம் போலவே மனம் குதூகலிக்கிறது.

    தொல்காப்பியர் சொல்வதைப்போல, வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல், ஆக்கம் செப்பல், நோக்குவ எல்லாம் அவையே போறல் என்ற களவு குண்டான இலக்கணம் இக்கதையில் வெகுண்டு எழுவதை உணர முடிகிறது.

    ஒரு படைப்பாளி, தன்னுடைய வெற்றியை தானே தீர்மானிப்பதில்லை படைப்புகள் தான் தீர்மானிக்கிறது.

    இந்த சிறுகதை உங்களை வென்று விட்டதாக நான் உணர்கிறேன்.

    மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் என் அன்பிற்குரிய இனிய நண்பரே…

  4. தெரியாமல் யாராவது உங்கள் சிறுகதையை வாசிக்க துவங்கிவிட்டால், அவரால் அந்த கதையை முடிக்காமல் நகரவே முடியாது ஐயா.💙

  5. ரொம்ப நல்லா இருக்கு, தேவையில்லாத வர்ணனை இல்லை,
    தெளிவான நடை
    நிஜமான காதல் தெரிந்தது கதையில்
    வாழ்த்துக்கள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.