மிளகு மருத்துவ பயன்கள்

மிளகு மருத்துவ பயன்கள் பல உள்ளன. மிளகு கைப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. காரச் சுவையைக் கூட்டும்.

குடல் வாயுவைப் போக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; வீக்கத்தைக் கரைக்கும்; வாத நோய்களைக் குணமாக்கும்; திமிர்வாதம், சளி, கட்டிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

மிளகு சிறுகொடி வகையைச் சேர்ந்த தாவரம். இலைகள் அகன்ற முட்டை வடிவமானவை. பெரியவை. 7 நரம்புகள் வரை கொண்டவை.

பூக்கதிர்கள் ½ அடி வரை நீளமாக தொங்கும் நிலையில் காணப்படும். காய்கள் பச்சையானவை. உருண்டையானவை. கனிகள், கருப்பானவை, 8 கோணங்களால் ஆனவை.

கலினை, கறி, காயம், கோளகம், மரியல், மரீசம், குறுமிளகு ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு.

மலைப்பகுதியில் 1200 மீ உயரத்திற்கு மேல் பயிரிடப்படுகின்றது. மலர்கள் ஜூன் மாதத்தில் உருவாகின்றன. மார்ச் மாதத்தில் இருந்து கனிகள், விதைகள் முதிர்ச்சி அடைகின்றன.

மிளகு விதை, இலைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. மிளகு மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது ஒரு மிக முக்கியமான உணவுப் பொருளாகும்.

மிளகு மருத்துவ பயன்கள்

10 மிளகை தூளாக்கி ½ லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடிக்க கோழை மற்றும் இருமல் தீரும்.

வேண்டிய அளவு மிளகை புளித்த மோரில் ஊற வைத்து, காய வைத்து இளவறுப்பாக வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் ½ கிராம் அளவு தூளைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர குடல்வாயு, செரியாமை, ஏப்பம் ஆகியவை குணமாகும்.

மிளகுத் தூள், வெங்காயம், உப்பு இவற்றைச் சம எடையாகச் சேர்த்து அரைத்து, தலையில் பூசி 1 மணி நேரம் கழித்து தலையைக் கழுவ வேண்டும். தொடர்ச்சியாக 1 மாதம் வரை செய்து வர புதிய முடி வளர ஆரம்பிக்கும்.

½ கிராம் மிளகுத் தூளுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவைகளைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நீரில் சேர்த்து, கொதிக்க வைத்து, பொறுக்கும் சூட்டில் ஒற்றடமிட அடிபட்ட வீக்கம் குணமாகும். வெந்த இலைகளை அரைத்து பசையாக்கி மேல் பூச்சாகப் பூசினாலும் அடிபட்ட வீக்கம் குணமாகும்.

மிளகு மருத்துவத்தைவிட உணவுப் பொருளாகவே அதிகம் பயன்பட்டு வருகின்றது. திரிகடுகு சூரணம், பஞ்ச தீபாக்கினி சூரணம், அஷ்ட சூரணம் போன்ற மருந்துகளில் மிளகும் ஒரு மருந்துப் பொருளாகச் சேர்கின்றது. இந்தச் சூரணங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.