முடக்கறுத்தான் – மருத்துவ பயன்கள்

முடக்கறுத்தான் இலை, வேர், சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தும்மலுண்டாக்கும்; பசியைத் தூண்டும்; வாத நோய்களைப் போக்கம்; உடலுக்குப் பலம் தரும். கிரந்தி, கரப்பான் போன்ற நோய்களையும் குணமாக்கும்.

“சூலைப் பிடிப்பு சொறி சிரங்கு வன்கரப்பான காலை தொடுவாய்வுங் கன்மலமும் சாலக் கடக்கத்தா னோடி விடுங் ….. முடக்கற்றான் றன்னை மொழி” என்கின்றது முடக்கறுத்தான் பற்றி அகத்தியர் குணபாடம்.

முடக்கறுத்தான் ஈரம் மிகுந்துள்ள இடங்களில் வேலி மற்றும் பெருஞ்செடிகளின் மேல் பற்றிப் படரும் கொடி. மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும், கோணங்களில் அமைந்த இறகு போன்ற காய்களையும் கொண்டது.

முடக்கறுத்தான் தமிழகமெங்கும், மழைக்காலத்தில் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது. முடக்கறுத்தான் செழிப்பான இடங்களில் பெரிய இலை, காய்களுடன் காணப்படும்.

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக் கொட்டன் போன்ற பெயர்களும் வழக்கத்தில் உண்டு. முடக்கறுத்தான் இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

முடக்கறுத்தான் இலைகளைப் பசுமையாக சேகரித்துக் கொண்டு இரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கை கால் குடைச்சல், மூட்டு வலி தீரும்.

கீல் வாதம், வீக்கம் தீர தேவையான அளவு முடக்கறுத்தான் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர குணமாகும்.

மலச்சிக்கல் தீர, குடல் வாயு கலைய ஒரு கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலையை ½ லிட்டர் நீருடன் சேர்த்து அவித்து இரசம் செய்து சாப்பிட வேண்டும்.

மூட்டுவலி, கை கால் வலி தீர முடக்கறுத்தான் இரசம்

ஒரு கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து ½ லிட்டர் புளித் தண்ணீரில் போட்டு 1 தேக்கரண்டி அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். புளியின் வாசனை போனவுடன், தேவையான அளவு மிளகு, சீரகம், சிறிதளவு பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து இரசத்துடன் சேர்க்கவும். மேலும் 3 பல் பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கி இரசத்துடன் சேர்க்கவும். நன்கு பொங்கியதும் தேவையான அளவு கடுகு சேர்த்து தாளித்து இறக்க வேண்டும். இதுவே முடக்கறுத்தான் இரசம். 1 டம்ளர் அளவு குடித்து வர வேண்டும்.

முடக்கறுத்தான் தோசை சாப்பிட்டது உண்டா? தோசை செய்ய தேவையான அளவு அரிசியுடன் 1 கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலைகளைச் சேர்த்து நன்கு அரைத்து உடனடியாக (புளிக்காமல்) தோசையாக செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலி தீரும்.

Comments are closed.