மூக்கிரட்டை – மூலிகை மருத்துவ பயன்கள்

மூக்கிரட்டை முழுத் தாவரமும் புனர்நவின் என்கிற காரச் சத்தைக் கொண்டுள்ளது. இதன் முக்கியமான பண்பு சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றுவதாகும்.

மஞ்சள் காமாலை, மேகவெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும்போது சிறுநீர் எளிதில் வெளியேற இது உதவுகின்றது. இதன் இந்த மருத்துவக் குணம் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

செடி, வேர், கைப்புச் சுவையும் வெப்பத்தன்மையம் கொண்டவை. இவை கோழை அகற்றும். மலமிளக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; காமாலை,நீர்க்கட்டு, வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றை குணமாக்கும்.

கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

பண்டைய இந்திய நூல்களில் நீர் வீக்கத்தை அழிக்க வல்லது என்கிற பொருள் படும் சோதக்னா என்ற பெயரால் இந்த தாவரம் அழைக்கப்பட்டது.

கீழ்புறம் வெள்ளையான, நீள் வட்டமான இலைகளையும் நீளமான தண்டில் கொத்தாக மலரும் சிவப்பு நிறமான பூக்களையும் கிழங்கு போன்ற தடித்த வேர்களையும் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் கொடி வகைத் தாவரம்.

அதிகமான கிளைகள் கொண்டது. ஒவ்வொரு கணுவிலும் இரண்டு இலைகள் காணப்படும். ஒன்று மற்றொன்றைவிட பெரியது. இலையின் அடிப்பகுதி உள் வளைந்த விளிம்புகளையுடையது. பழங்கள் சிறியவை. சுரப்பிகளுடன் ஐந்து விளிம்பு கோடுகள் கொண்டு ஒட்டும் தன்மை உடையதாக இருக்கும்.

புட்பகம், மூக்குறட்டை, முக்கரைச் சாரணை, இரத்த புட்பிகா, சிறிய மூக்கிரட்டை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இந்தியா முழுவதும் பாழ் நிலங்களிலும் விவசாய

நிலங்களிலும் புற்கள் அடர்ந்துள்ள இடங்களிலும் இயல்பாக வளர்கின்றன. இலை, வேர் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்த சோகை குணமாக இலையைப் பொரியல் செய்து வாரம் இரு முறைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கண் பார்வை தெளிவடைய வேர்த்தூள் காலை மாலை வேளைகளில் ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உட்கொள்ள வேண்டும்.

இலையை கீரையாக சமைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் குணமாகும். கண் பார்வை தெளிவடையும். உடல் வனப்பாகும்.

 

பெருமூக்கிரட்டை

இதன் இலைகள், மலர்கள், வேர்கள் மூக்கிரட்டையை விட பெரியதாக இருக்கும். மலர்கள், ஊதா நிறமானவை. வளர் நிலங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும். வேர்கள் மருந்துவத்தில் பயன்படுகின்றன.

இவை, வாத நோய்களுக்குச் சிறப்பாக உபயோகமாகின்றன. மற்றபடி, மூக்கிரட்டையின் அனைத்து உபயோகங்களும் இதற்குப் பொருந்தும்.