யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி “உலகிலுள்ள எல்லா ஊர்களும் நமது ஊரே; உலக மக்கள் எல்லோரும் நம் உறவினரே” என்னும் நல்ல கருத்தை நம் மனதில் விதைத்தவர் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றன்.

உலகிலுள்ளார் அனைவரும் இன்புற்றிக்க வேண்டும் என்பதே அருளாளர்களின் கோட்பாடாகும்.

வள்ளுவர் உள்ளத்திலும் இக்கருத்து வளர்ந்திருந்தது. தமிழ்ச் சான்றோர்களின் கனவே இதுதான்.

பண்டைக்கால மக்களிடம் ஒற்றுமை உணர்ச்சி நன்கு பரவியிருந்தது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை அறிந்த மக்கள் கூட்டங் கூட்டமாய் கூடி வாழ்ந்தனர்.

காட்டை அழித்துக் கவின்மிகு கழனிகளைத் தோற்றுவித்தனர். கட்டுப்பாடுடன் வாழ்க்கையை நடத்தினர். பொதுமைப் பண்பே ஓங்கியிருந்தது.

பின்னர் வேறுபாடுகள் தோன்றின. பொறாமையும் பேராசையும் போட்டியிட்டு வளர்ந்தன. பிரிவுகளும் பேதைமையும் பேரளவில் நாட்டை நலியச் செய்தன.

நாளடைவில் பல நாடுகளும் இனங்களும் உருப்பெற்றன. நாட்டு நலனைக் காப்பதே நாட்டுத் தலைவர்களின் பணியாயிற்று; கடமையும் ஆயிற்று.

சில நேரங்களில் நாட்டு நலன் என்ற பெயரில் நாடாண்டோர் நாணத்தகுந்த செயல்களையெல்லாம் செய்தனர். அன்பும் பண்பும் அழித்த ஆணவம் ஆடல் நிகழ்த்தியது.

பூசலும் போராட்டமும் போலிகளையும் காலிகளையும் உருவாக்கின. மக்கள் நன்னெறி விலகி நாச வ‌ழியில் சென்றனர்.

இந்த நேரத்தில் தான் அறவோரும், அருளாளரும் தோன்றி மக்களை மக்களாக வாழச் செய்தனர். ஒற்றுமை எண்ணத்தை ஓங்கி எழச் செய்தனர்.

கடந்த‌ நூற்றாண்டில் காந்தியடிகள் ஆற்றிய அரும்பணியை யார் மறக்கவல்லார்? மனித இனத்தின் உயர்வு தேடுவதே உண்மையான அரசியல் என்ற கோட்பாட்டில் நற்செயல் பல செய்தார்.

இந்தியா உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்னும் இனிய எண்ணத்தோடு பாடுபட்டார்.

இன்று அறிவியல் அனைத்து நாட்டவரையும் பிணைத்து வருகின்றது. இணையமும், வணிகமுறையும், உலகப் பயணமும்  உள்ளங்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இணையமும், கல்வியறிவும், கலப்பு மணமும், வானொலியும், தொலைக்காட்சியும் மக்களிடையே நெருங்கிய உறவை ஏற்படுத்தி வருகின்றன.

உலக ஒற்றுமை மன்றம் ஒற்றுமையின் சிறப்பைப் பற்றி ஒழுங்குறப் பரப்பி வருகின்றது. பெண்டல் வில்கி ஒரே உலகம் என்னும் நூலை வெளியிட்டு உலக ஒற்றுமையை மேலை நாடுகளில் உண்டாக்க முயன்றார்.

தமிழகத்தின் பூங்குன்றனாரும், வள்ளுவரும் உலக ஒற்றுமை விதையை ஊருன்றி உயர்வாக வளர்த்தனர். வடலூர் வள்ளலார் வையக ஒற்றுமையை வலியுறுத்தி வளம்பெறச் செய்தார்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களான பாவலர் பாரதியாரும் பாவேந்தரும்

ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்

என்னும் ஒற்றுமை உணர்வை ஊட்டும் எழுச்சிப் பண்ணைப் பாடி உலக ஒற்றுமையைக் கருத்துடன் பரப்பி வந்தனர்.

மாந்தரில் வேற்றுமை படைப்பது மதியீனமாகும்.

மக்கள் ஒரே குலமாய் வாழ வேண்டும்.

வள்ளுவன் வழியில் சென்று வையகத்தை ஒன்று படுத்துவோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம் தமிழ்ச் சான்றோரின் பொன்மொழி நமக்கு வழிகாட்டும்.

S.ஆஷா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.