யானையும் ஓநாயும்

முல்லை வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வசித்து வந்தன. அதில் ஓநாய் கூட்டமும் ஒன்று.

அவை கண்ணில்படும் விலங்குகளை கூட்டமாக வேட்டையாடி தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தன.

சிலநாட்களாக ஓநாய் கூட்டத்திற்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.

இதனை கவனித்து கொண்டிருந்த கிழட்டு ஓநாய் எப்படியாவது தனது கூட்டத்திற்கு வயிறார உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் கிழட்டு ஓநாய் யானை ஒன்று செல்வதை பார்த்தது. இந்த யானையை நமது கூட்டத்திற்கு இரையாக்கி விட வேண்டும் என்று எண்ணி மனதிற்குள் திட்டம் ஒன்றை வகுத்தது.

அத்திட்டத்தின்படி யானையிடம் சென்ற கிழட்டு ஓநாய் “யானையாரே, யானையாரே சற்று நில்லுங்கள். எங்களுக்கு தலைவர் ஒருவர் இருக்கிறார்.

அவர் எங்களால் நிறைவேற்ற முடியாத கட்டளைகளை எல்லாம் எங்களுக்கு இட்டு எங்களை மிகவும் துன்புறுத்துகிறார்.

ஆதலால் எங்கள் கூட்டத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களைப் போல நல்லவரை தலைவராக விரும்புகிறோம்.

இதனை உங்களிடம் தெரிவித்து உங்களின் சம்மதத்தோடு உங்களை அழைத்து வர எங்கள் கூட்டத்தினர் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளனர்.

உங்களுக்கு மட்டும்தான் எங்களின் தலைவராகக் கூடிய தகுதி இருக்கிறது.

 நீங்கள் இடும் கட்டளைகளுக்கு பெரும்மதிப்புக் கொடுத்து நாங்கள் நிறைவேற்றுவோம். ஆதலால் நீங்கள் இப்பொழுதே எங்கள் கூட்டத்திற்கு வாருங்கள்” என்று நயவஞ்சகமாகப் பேசியது.

ஓநாயின் புகழ்ச்சியில் யானை மயங்கியது. தான் தலைவன் என்று எண்ணி ஆனந்தம் கொண்டது. யானைக்கு ஓநாயின் பேச்சு பிடித்துப்போகவே அதனுடன் செல்ல சம்மதித்தது.

ஓநாய் தன்னுடைய திட்டத்தின்படி யானையை முதலில் நல்ல பாதையிலும் பின்னர் சேறும் சகதியும் நிறைந்த சதுப்பு பகுதியிலும் அழைத்து சென்றது.

ஓநாயின் திட்டப்படி யானை சேற்றில் மாட்டிக் கொண்டது. அதனால் எவ்வளவு முயன்றும் வெளியே வரஇயலவில்லை.

அப்போது ஓநாய் யானையிடம் “தலைவரே, தாங்கள் இப்பொழுது எனக்கு இடும் கட்டளை யாது?” என்று கேட்டது.

யானை ஓநாயிடம் “என்னை சேற்றிலிருந்து வெளியே இழுக்க வேண்டும். இதுவே நான் உனக்கு இடும் கட்டளை” என்றது.

ஓநாய் “அப்படியானால் நீங்கள் என் வாலை உங்கள் துதிக்கையால் பிடித்துக் கொள்ளுங்கள். நான் உங்களை வெளியே இழுத்து விடுகிறேன்” என்றது.

“உன் வாலால் என்னை வெளியே இழுக்க முடியுமா?” என்று யானை கேட்டது.

அதற்கு ஓநாய் “என்னால் செய்ய இயலாத காரியத்தை ஏன் செய்யச் சொல்கிறீர்கள். அதற்காகத்தானே நாங்கள் பழைய தலைவரை விரட்டியடித்தோம்” என்றது.

யானைக்கு ஓநாயின் நயவஞ்சகம் அப்போதுதான் புரிந்தது. ஆனால் யானையால் வெளியே வரஇயலாமல் சேற்றில் மூழ்கி இறந்தது. ஓநாய்க‌ள் யானையின் உடலை கடித்துத் தின்றன.

யானையும் ஓநாயும் கதையின் நீதி

சம்பந்தம் இல்லாமல் ஒருவர் நம்மைப் புகழ்ந்து இறுதியில் நமக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விடுவார்.

ஆதலால் சம்பந்தம் இல்லாதவர் புகழும்போது நாம் அவர்களிடம் ஒதுங்கி இருப்பது நலம் என்பதே யானையும் ஓநாயும் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.