ரம்மியம் – சிறுகதை

ரம்யா இல்லாத வீடு செறிச்சோடி இருந்தது. சுவர்க் கடிகாரம் காலை எட்டு மணியைப் பிரகனப்படுத்தியது. அன்று ஞாயிற்றுக் கிழமை.

அப்போதுதான் சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான் கிருஷ்ணன். சூடாக காபி சாப்பிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

ரம்யா இருந்திருந்தால் சூடாக காபி என்ன? கூடவே ஏதாவது டிபனும் கொடுத்திருப்பாள்.

நேற்று மாலைதான் குழந்தை அருணை அழைத்துக் கொண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு சேலம் சென்றிருக்கிறாள்.

இனி அருணுக்குப் பள்ளி திறக்கும் சமயம்தான் வருவாள். அருணின் பள்ளி திறக்க இன்னும் இரு வாரங்கள் உள்ளன.

டி.வியை உயிர்ப்பித்தான்.

சேனல் ஒன்றில் விதவிதமான டிபன் ஒன்றைத் தயாரிப்பது பற்றி நடுத்தர வயது பெண்மணி செய்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

பசி வயிற்றைக் கிள்ளியது கிருஷ்ணனுக்கு. இன்று சாப்பிட என்ன செய்வது? யோசனையில் மூழ்கினான்.

அவர்கள் வசிப்பது அரசாங்க குடியிருப்பு. குடி வந்து ஆறேழு மாதங்களே ஆகியிருந்தன. யாரிடமும் அவ்வளவு நெருக்கமான பழக்கம் இல்லை.

அவர்கள் இருந்த பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ஓட்டல் டெண்டர் முடிந்து விட்டதால் இழுத்து மூடியிருந்தார்கள்.

வேறு ஓட்டல்கள் இல்லை. ஆங்காங்கே டீக்கடைகளும், பெட்டிக் கடைகளுமே இருந்தன.

தற்போதைய நிலையில் வெளியே போய் ஏதாவது சாப்பிட்டு வரவேண்டும் என்றால் குறைந்தபட்சம் எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சிறிய டவுனுக்குத்தான் செல்ல வேண்டும்.

பஸ்ஸூக்காக காத்திருந்து, பஸ் வந்து, அங்கு சென்று சாப்பிட்ட பின் மீண்டும் பஸ் பிடித்து அவன் வசிக்கும் பகுதிக்கு வருவதற்குள் பிராணன் போய் விடும். ஒருவேளை மட்டும் என்றால் பரவாயில்லை. மூன்று வேளைகளுக்கு என்ன செய்வது?

நினைக்கையில் கிருஷ்ணனுக்கு எரிச்சல் மேலிட்டது.

சமையலறை சென்று நோட்டமிட்டான். பாத்திரங்கள் யாவும் பளிச்சென்று துலக்கப்பட்டு மிகநேர்த்தியாக சுவர் அலமாரியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

காஸ் அடுப்பிலிருந்து கிரைண்டர், மிக்ஸி என ஒவ்வொன்றுமே அந்தந்த இடத்தில் ஒழுங்காக, முறையாக வைக்கப்பட்டு சுத்தமாக‌க் காட்சியளித்தன.

குக்கரில் சாதம் மட்டும் வைத்தால் போதாது. கூடவே ரசமோ, சாம்பாரோ தயார் பண்ண வேண்டும். எதுவும் வேண்டாம், சிம்பிளாய் ஒரு துவையல் அரைக்கலாம். மெனக்கட வேண்டும்.

பருப்பு, மிளகாயை வறுத்தல், தேங்காய் துருவுதல் என எவ்வளவு வேலைகள்?. அடுத்தடுத்து சலிப்புதான் தலை தூக்கியது அவனுக்கு.

பிரிஜ்ஜில் தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. சாதம் மட்டும் வைத்து சமாளித்து விடலாமா? என்று யோசித்தான்.

கிருஷ்ணனுக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும்.

இன்று ஒருநாளை ஓட்டுவது என்பதே ஒரு வருஷத்தை ஓட்டுவது போலிருந்தது. நாளை ஆபீஸ் போய் விடலாம். இருக்கவே இருக்கிறது ஆபீஸ் கேண்டீன். கவலையில்லை.

காலை டிபன் முதலில் தயாரிக்க முடிவெடுத்து உப்புமா தயாரிக்க முற்பட்டான். முன்னதாக அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரம் ஒன்றில் நீரைக் கொதிக்க வைத்து ஃபில்டரில் காப்பித் தூளை நிரப்பினான். டிகாசன் தயாரித்துக் கொண்டிருந்த போது காலிங் பெல் ஒலித்தது.

அடுப்பை அணைத்து வெளியே வந்து பார்த்தபோது வேலைக்கார பெண்மணி நின்று கொண்டிருந்தாள். அவள் உள்ளே வந்து யந்திரமாய் வீடு பெருக்கித் துடைக்க ஆரம்பித்தாள்.

மீண்டும் காபி தயாரிப்பில் ஈடுபட்டபோது மறுபடியும் அழைப்பு மணி ஒலித்தது. யார் எனப் பார்த்தபோது ‘அயர்ன்’ வண்டியுடன் முதியவரொருவர்.

அடுத்த வாரம் அவரை வரச் சொல்லி விட்டு உள்ளே வந்து ஒரு வழியாகக் காபி தயாரித்துப் பருகி விட்டு, டிபன் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தான். மணி பத்தடித்தது.

“ஐயா, சிலிண்டர் வந்திருக்கு” என்றாள் வேலைக்காரப் பெண்மணி. பாதியிலேயே எழுந்து போய் காலி சிலிண்டரை உருட்டிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு புதுசிலிண்டரை வாங்கி வைத்தான்.

உப்புமாவைக் கிளறிக் கொண்டிருந்தபோது “சார் சார்” என யாரோ அழைத்தார்கள். எரிச்சலுடன் சென்று பார்த்தபோது விற்பனைப் பிரதிநிதிகள் இருவர் தங்கள் கம்பெனியின் புதிய தயாரிப்பாக ஓரிரு சோப் கட்டிகளை வைத்துக் கொண்டு விளக்க முற்பட்டார்கள்.

“போயிட்டு வாங்க. இன்னொரு முறை பார்க்கலாம்.” என அவர்களை அனுப்பி வைத்தான்.

டிபன் செய்து முடித்து குக்கரில் சாதம் மட்டும் வைத்து விட்டு ஷேவ் செய்து குளித்து முடித்து வருகையில் மணி பதினொன்று. சாதம் ரெடியாகியிருந்தது. குக்கரை இறக்கி அடுப்பை அணைத்தான்.

காப்பி தம்ளர்கள், டிபன் தயாரித்த பாத்திரங்கள் என தொட்டிக்குள் கிடந்தன. அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய் பின்புறக் குழாயடியில் வைத்தான்.

வேலைக்காரி பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்த வேளையில் டிபனை சாப்பிட்டு முடித்தான். எல்லா வேலையும் முடிந்து வேலைக்காரியும் கிளம்பினாள்.

ஒருகுட்டித் தூக்கம் போடலாம் என்ற நினைப்புடன் ஈசி சேரை எடுத்து வந்து ஹாலில் போட்ட போது கேட் சப்தப்படுத்தும் ஓசை கேட்டு வெளியே வந்து பார்த்த போது சிறுவர்கள் சிலர் கேட் வெளியே நின்று கொண்டு, “அங்கிள் கிரிக்கெட் பால் உள்ளே விழுந்திருச்சு. கொஞ்சம் கேட்டைத் திறக்கறீங்களா?” எனக் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

இருக்கிற வேலைகள் போதாதென்று இது வேறு. கேட்டைத் திறக்காமலேயே உள்ளே விழுந்திருந்த பந்தை ஒருவித வெறுப்புடன் எடுத்து வெளியே வீசினான்.

சற்று கண் அயர்ந்து எழுந்த போது, மணி இரண்டாகியிருந்தது. லேட்டாக டிபன் சாப்பிட்டதால் பசியில்லை கிருஷ்ணனுக்கு. டி.வியை ஆன் செய்தான்.

அரைகுறை ஆடையுடன் வாயில் வந்த வார்த்தைகளை பாட்டு என்ற பெயரில் முனங்கலுடன் கொட்டிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பிடிக்காமல் டி.வியை அணைத்தான்.

ரம்யா இல்லாத வீடு வெறுமையாக இருந்தது. சாப்பிடவும் பிடிக்கவில்லை. என்ன சாப்பாடு வேண்டிக் கிடக்கு? தயிர் சாதமும், ஊறுகாயும் ஒரு சாப்பாடா?

ரம்யா சென்று ஒரே ஒரு நாளிலேயே இவ்வளவு வெறுமையும், சலிப்பும், எரிச்சலும், வேண்டா வெறுப்பும் தோன்றுகிறதே? அவள் வர இன்னும் இருவாரங்கள் ஆகுமே? எப்படி சமாளிப்பது? மனம் முழுக்க கவலை அப்பிக் கொண்டது கிருஷ்ணனுக்கு.

ரம்யா இல்லாத வீடு ரம்மியம் இழந்து காணப்பட்டதாகவே பட்டது. ஒரு வீட்டில் பெண் இல்லையென்றால் வீட்டின் களையே போய் விடுகிறதே.

தாயோ, சகோதரியோ, மனைவியோ ஏதோ ஒரு உறவில் பெண் என்பவள் இருந்தால்தான் ரம்மியம். இல்லை என்றால் வீடு பாலைவனமாக மாறி விடுவதை அனுபவபூர்வமாக உணர்ந்தான் கிருஷ்ணன்.

உண்மையிலேயே பெண் என்பவள் ஒரு மாபெரும் சக்தியே. மறக்க முடியாத, மாறுபட்ட கருத்துக்கு இடமே இல்லாத ஓர் உண்மைதான்.

‘டீ’க்காக டிரஸ் செய்து கொண்டு காலை ஆபீஸ் சென்று ஃபேன் அடியில் அமர்ந்து ஏதோ சில ஃபைல்களைப் புரட்டி, சக ஊழியர்களுடன் ஊர்க்கதைகள் பேசி, கேண்டீனில் கண்டதையும் சாப்பிட்டு மாலை மிகச் சுலபமாக வீடு திரும்பி விடுகிறோம்.

ஆனால் வீட்டுப் பெண்மணிகளுக்குத் தன்னைவிட எவ்வளவு பொறுப்புகளும், வேலைகளும் இருக்கின்றன? வீட்டில் இருந்து பார்க்கும்போது தானே தெரிகிறது; புரிகிறது.

வேலைக்காரியுடன் மல்லாடி, வருவோர், போவோருக்குப் பதில் சொல்லிக் கொண்டு அக்கம் பக்கத்தினருடன் பாங்காக நடந்து கொண்டு, குழந்தைகளை கவனித்து, வாய்க்கு ருசியாக சமைத்து, தேவையானப் பொருட்களைப் பார்த்து பார்த்து வாங்கி, கணவனின் தேவைகளுக்கும் ஈடு கொடுத்து. அப்பப்பா தினம் அவள் படும் பாடு நினைக்க நினைக்க மலைப்பாக இருந்தது கிருஷ்ணனுக்கு.

வருடத்தில் ஒரு மாறுதலாக கொஞ்ச நாட்கள் இப்படி அவள் சென்று விட்டால், ஒருநாளைக்குகூட நம்மால் சமாளிக்க முடியாததை நினைத்த போது தன் மீதே வெட்கமாக இருந்தது கிருஷ்னனுக்கு.

ரம்யாவை நினைக்க நினைக்க அவள் நினைவு அதிகமாகியது. அவள் இல்லாமல் உலகமே அஸ்தமித்தாற் போன்று இருந்தது.

வாழ்க்கையில் முழுமை, நிறைவு, ஆனந்தம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவைகளைப் பெற பெண்ணின் பங்கு எவ்வளவு அவசியம் என்பதை கிருஷ்ணனால் உணர முடிந்தது.

மாலை தோட்டத்துக்குப் பூச்செடிகளுக்கு ‘ஹோஸ்’ மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம், வீட்டினுள் செல்போன் அழைத்தது. ‘ஹோஸ்’ பைப்பை அப்படியே போட்டுவிட்டு உள்ளே சென்று போனை எடுத்தான். ரம்யா பேசினாள்.

“எப்படியிருக்கீங்க? இங்கே அப்பாவும், அம்மாவும் திருப்பதி போயிருக்காங்க. அங்கிருந்து மாமாவோட பெண் கல்யாணத்திற்கு நெல்லூர் போறாங்க. திரும்பிவர ரெண்டு வாரம் ஆகுமாம். சித்தப்பா வீட்டிலிருந்து பேசுறேன். வந்ததுக்கு ரெண்டு நாள் இருந்திட்டு நான் கிளம்பி வர்றேன்” என்றாள்.

போன் பேசி விட்டு மீண்டும் தோட்டத்திற்கு வந்த போது பகலில் தகித்த வெய்யிலின் வெப்பத்தைக் கருமேகங்களின் துணையோடு இதமான ஜில்லென்று காற்று அடியோடு விரட்டி சடசடவென மழையை ஆரவாரத்துடன் வரவேற்க, ஒருசில நிமிடங்களில் சுற்றுப்புறச்சூழல் குளிர்ந்து போனது.

ரம்யா சீக்கிரமே திரும்பி வருதை அறிந்ததும் கிருஷ்ணனின் மனமும் குளிர்ந்தது. அந்த மனக்குளிர்ச்சியுடன் மனதில் ஒரு தீர்மானம் செய்து கொண்டான்.

ஆபீசுக்கு பத்து நாட்கள் லீவு போட்டுவிட்டு ரம்யா வந்ததும் அவளையும், அருணையும் அழைத்துக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் எனச் செல்ல வேண்டும் என்று.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

2 Replies to “ரம்மியம் – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.