வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு திருவில்லிபுத்தூர் மதுரைச் சாலையில் கிருஷ்ணன் கோயிலிருந்து மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவில்லிபுத்தூர் வட்டத்து வத்திராயிருப்பு உள்வட்டத்தில் அமைந்துள்ள இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்கில் காணப்படுகின்றது.

இதன் பழமைக்கு எடுத்துக்காட்டாய் காசிவிசுவநாதர் கோயில், சேது நாராயணப் பெருமாள் கோயில், முத்து மாலையம்மன் கோயில், நல்லதங்காள் கோயில், அனுமார் கோயில் ஆகியன விளங்குகின்றன. மேலும் இப்பகுதியில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்களும் இதனை உறுதி செய்கின்றன.

இவ்வூரை முதன் முதலில் ‘வத்திரய்யர்’ என்பவர் உருவாக்கியதால் வத்திரய்யர் இருப்பு என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி வத்திராயிருப்பு என்றாயிற்று என்று கூறுவர். மேலும் இவ்வூரின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளத்தைப் பிளவக்கல் அணையில் சேர்த்து வைத்து என்றும் வற்றாத இருப்பாக நீர் நிறைந்திருந்தமையால் வற்றாத இருப்பே நாளடைவில் வத்திராயிருப்பு ஆயிற்று என்றும் கூறிவருகின்றனர்.

இங்குள்ள நல்லதங்காள் கோயில் புகழ் பெற்று விளங்குகின்றது. நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளுடன் மூழ்கியதாகக் கூறப்படும் கிணறு இங்குள்ளது. இதனருகிலேயே நல்லதங்காளுக்கெனக் கோயில் எடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றித் தொல்லியல் தடையங்கள் நிரம்பக் கிடைத்துள்ளன. கருப்பு சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் முதுமக்கள் தாழிகளின் உடைந்த பகுதிகள், சங்காலச் செங்கற்கள் முதலியன இவ்வூரின் வரலாற்றைப் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கு எடுத்துச் செல்வதாக அமைகின்றன. இத்துடன் இரும்பு உருக்கும் கழிவுகளும் காணப்படுகின்றன.

இங்கு காணப்படும் காசிவிசுவநாதர் கோயில் பிற்காலப் பாண்டியர்களின் கட்டடக் கலைப்பாணியுடன் திகழ்கின்றது. தென்காசிப் பாண்டியர் காலத்திய திருப்பணியும் இதற்குப் புகழ் சேர்க்கின்றது. இங்குள்ள இரண்டு கல்வெட்டுகள் தென்காசிப் பாண்டிய மன்னன் காலத்தியவை. இங்குள்ள கல்வெட்டுகள் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலதானத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மேலும் மச்சாழ்வி என்ற உறவுமுறைப் பெயர் வழக்கும் இதில் காணப்படுகின்றது. தென்காசிக் கோயிலில் அண்ணாள்வி என்று வருவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. மேலும் கே.எஸ்.கிருஷ்ணன் என்ற அறிவியல் அறிஞரைப் பெற்ற பெருமைமிக்கது வத்திராயிருப்பு.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.