வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்

எல்லா விதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிற முக்கியமான அங்காடித்தெரு போல, அனைத்து வயதினரையும் திருப்தி செய்கிற, வேறு எங்கும் இல்லாதவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிற ஒரு சிறந்த இணையதளமாக ’வலைத்தமிழ்.காம்’ அமைந்திருக்கிறது.

மிகப்பெரும் உழைப்பில், தமிழ், தமிழ் சார்ந்த  முன்னேற்றம், தமிழர் களின் வளர்ச்சி,  படைப்பாக்கப்  பெருக்கம், உலக இலக்கியங்களுக்குத்  தக்க தமிழைக் கொண்டு செல்லுகிற முயற்சி. இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்றால், அது வலைத்தமிழ் குழுமத்தின் மூலமாக நடைபெறும் என்று கூறலாம்.

வடஅமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ் மக்கள், சிறப்புடன் உருவாக்கித் தந்திருக்கிற மாபெரும் அட்சய பாத்திரம் ”வலைத்தமிழ்” என்கிற குழுமம்.

இக்குழுமத்தில், வலைத்தமிழ் இணையதளம், வலைத் தமிழ் பன்னாட்டுப்  பல்சுவை மாத இதழ், வலைத்தமிழ் சிறுவர்களுக்கான மாத இதழ், வலைத்தமிழ் அகாடமி, தமிழ்ச்சரம்  எனும் பகுதிகள் சிறப்புடன் இயங்குகின்றன.

இவையெல்லாம், தமிழர்களுக்காகத் தமிழ்  மேன்மைக்காகத்  தமிழ்க் குடும்பங்கள் செய்கிற மாபெரும் இலக்கிய பணியாகும்; சமூகப் பணியாகும்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், மொழியைத் தன் மக்களிடம், அதாவது, தன் சந்ததியினர் மறந்துவிடக் கூடாது, தமிழை வளர்க்க வேண்டும் என்கிற பெரிய அவாவின் காரணமாக, இச்செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாது உலகம் முழுமைக்குமானத் தமிழர்களை ஒன்றிணைத்து மேன்மைப்படுத்தும் செயலையும் செய்து கொண்டிருக்கின்றனர். பாரட்டவேண்டிய அற்புதமான செயல் இதுவாகும்.

”வலைத்தமிழ்.காம்”  என்ற  இணையதளத்தைப் பற்றி இனி காண்போம்.

 

இத்தளத்தில், முகப்புச்செய்திகள், அரசியல், சினிமா, மொழி இலக்கியம், சமையல், ஆன்மீகம், சிறுவர் பகுதி, உடல்நலம், தற்சார்பு, மற்றவை எனும் தலைப்புகளின் உள்ளாகப் பல்வேறு விதமான உள்தலைப்புகளை வைத்துப் படைப்புகளையும், சிந்தனைகளையும் பதிவிட்டு உள்ளனர்.

”செய்திகள்” எனும் பகுதியில், தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, சமூகப் பங்களிப்பாளர்கள், தமிழ்ச் சாதனையாளர்கள், தமிழ்த் தொழில் அதிபர்கள், தமிழர்களின் கண்டுபிடிப்புகள் எனும் தலைப்புகளில் பல நூறு கட்டுரைகள், செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

உடனடியாக அவ்வப்பொழுது நடக்கும் செய்திகள், அது எவ்வாறு கூறப்பட வேண்டுமோ, அவ்வாறான நடுநிலையான செய்திப் பரிமாற்றத்திற்கான பகுதியாக இது அமைந்துள்ளது

”அரசியல்” எனும் பகுதியில்  உள்தலைப்புகளாகக் கட்டுரை அல்லது நிகழ்வு, அரசியல் வரலாறு, அரசியல்வாதிகள், தேர்தல், வளர்ச்சித் திட்டங்கள், சுதந்திரப் போராட்டம் எனும் தலைப்புகளில் அரசியல் சார்பான பல கட்டுரைகள், வரலாறுகள் இங்குப்  பதிவிடப்பட்டுள்ளன.

இது வரலாற்றின் தொகுப்பாகும். இளையசமூகம்  தெரிந்து கொள்ளத்  தேவையான செய்திகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.

”சினிமா”  என்னும் பெரும் தலைப்பில், சினிமாச் செய்திகள், திரை விமர்சனம்,  சினிமாத் தொடர்கள், திரைப்படங்களின் விபரம், கட்டுரைகள் எனும் உள்தலைப்புகள் காணப்படுகின்றன.

சினிமா சார்பான இளைஞர்களின் தேடல்களுக்கு இது மிகச்சரியாகத் தீனிபோடும். புதுப்புது படங்கள், பழைய திரைப்படங்கள், அவற்றின் சிறப்புகள், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற பல விஷயங்கள் இங்குப் பரிமாறப்படுகின்றன.

”மொழி இலக்கியம்” எனும் பெரும்பகுதியில், கவிதை, தமிழ்மொழி மரபு, சிறுகதை, கட்டுரை, சங்க இலக்கியம், திருக்குறள், பாடல்கள், தமிழ் நூல்கள், தமிழிசை,  தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஆய்வுக் கட்டுரைகள்,  உலகத்தமிழ் மாநாடுகள் எனும் பகுதிகள் காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியப் படைப்பாளர்களின் படைப்புகள் தினந்தோறும் இங்குப் பதிவிடப்படுகின்றன. இலக்கியக் களஞ்சியமாக இது காணப்படுகிறது. கவிதைகள், கட்டுரைகள், உலகத்தமிழர்களின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.

உலகத்தமிழ் எழுத்தாளர்களை, அவர் தம் படைப்புகளை உணர்ந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் இப்பகுதி பெரிதும் பயன்பாடாக இருக்கும். இளம் படைப்பாளர்கள் முதல், அனைவரும் தமது படைப்புகளை இப்பகுதியில் வெளியிடலாம்.

”சமையல்” எனும் பகுதியில், அசைவ உணவுகள், சைவ உணவுகள், இனிப்புப் பலகாரங்கள், காரப் பலகாரங்கள், ஆரோக்கிய உணவு, சமையல் கட்டுரைகள், பிறநாட்டுச் சமையல்கள் போன்ற எண்ணற்ற சமையல் சார்பான கட்டுரைகள்  இங்குப் பதிவிடப் பட்டுள்ளன. இது பெண்களுக்கான  சிறப்புப் பகுதியாக அமைந்திருக்கின்றது.

”ஆன்மீகம்” எனும் பகுதியில், ராசிபலன் கட்டுரை, இந்து மதம், கிறிஸ்துவம், இஸ்லாம், ஓகம், கோயில்கள், பண்டிகைகள், ஆன்மீகம், தமிழர்கள் சிந்தனைகள், ஜோதிடம் என்பன வயது முதிர்ந்தவர்களுக்கான பகுதியாக அல்லது ஆன்மீகத்தை நாடுபவர்களின் தேடுதல் பகுதியாக இப்பகுதி அமைந்துள்ளது.

தமிழகத்தில் காணப்படுகின்ற, வெளிமாநிலங்களில் காணப்படுகிற, பிறநாடுகளில் காணப்படுகிற, திருக்கோவில்கள் குறித்த எண்ணற்ற பல தகவல்கள்  இங்கு கூறப்பட்டுள்ளன. ஆன்மீகம் சார்ந்த கட்டுரைகள் நிறைந்து காணப்படுகின்றன.

”சிறுவர்” எனும் தலைப்பின்கீழ், குழந்தை வளர்ப்பு, தமிழ்க் கல்வி,  சுட்டிக் கதைகள், சிறுவர் விளையாட்டு, தமிழகக் கலைகள், குழந்தைப் பெயர்கள், பிறந்தநாள் பாடல், சிறார் செய்திகள், சிறுவர் இலக்கியம்,  கட்டுரைத் தொடர்கள் என்பனவாகக் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

உள்தலைப்புகளில், அவை சார்ந்த அனைத்து செய்திகளும்  பதிவிடப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான பயனுள்ள செய்திகள் பல அடங்கியுள்ள பகுதியாக இது அமைந்திருக்கிறது.

”உடல் நலம்” எனும் பகுதியில், மருத்துவ குறிப்புகள், பழங்கள், தானியங்கள், குழந்தை மருத்துவம், காய்கறிகள்-கீரைகள்-பூக்கள், மகளிர் மட்டும், யோகா-தியானம், உடற்பயிற்சி,  ஹெல்த் டிப்ஸ், மகளிர் அழகுக் குறிப்புகள், கட்டுரை  இங்கு  பதிவிடப் பெற்றிருக்கின்றன. இவை உடல்நலம் சார்ந்து தேடுகிற வாசகர்களுக்குப் பலனுள்ள பகுதியாக அமைந்திருக்கிறது.

”தற்சார்பு” எனும் பகுதியில், விவசாயச்செய்திகள், தோட்டக்கலை, விவசாயக்கருவிகள், கட்டுரைகள், கால்நடை-மீன் வளர்ப்பு, தற்சார்பு, வாழ்வியல் எனும் தலைப்புகளோடு கட்டுரைகள் காணப்படுகின்றன.

”மற்றவை” எனும் தலைப்பில், அறிவியல் செய்திகள், பொதுச்சேவை,  சிறப்புத் தகவல், வாழ்வியல், இந்தியச் சட்டம் எனும் உள் தலைப்புகளில் பொதுவான கட்டுரைகள், குறிப்புகள், ஆவணங்கள் போன்ற பதிவிடப்பட்டு இருக்கின்றன.

இத்தளத்தில், திருக்குறள், புகைப்படங்கள்,  காணொளிகள், குழந்தைகளுக்கான‌ பெயர்கள் எனும் தலைப்புகளிலும் தகவல்கள் விரிவாகப் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக,  ”திருக்குறள்” எனும் பகுதியில் 1330 குறள்களுக்கும்,  ஒலிப்பதிவு முறையிலான  பதிவுகள் உள்ளன.  திருக்குறளை வாசித்துப் பதிவு செய்து இங்கே பதிவேற்றியுள்ளார்கள்.

கண்ணால் கண்டும், காதால் கேட்டும் திருக்குறள் படிக்கலாம், தெளிவாக அறியலாம். அங்கேயே விரிவான உரை விளக்கத்திற்காகச் சொடுக்கியும் உள்ளது. அதைத் தேர்வு செய்தால் பல அறிஞர்களின் திருக்குறள் உரைகள் பதிவிடப்பட்டுள்ளன.

இதைப்போல், ”புகைப்படங்கள்” எனும் பகுதியில் பல வரலாற்று அறிஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
”காணொளிகள்” எனும் பகுதியில் பல வரலாற்றுக்  காணொளிகள் இடம் பெற்றுள்ளன.

”குழந்தைகளுக்கான‌ பெயர்கள்” பக்கத்தில் 1,05,000 குழந்தைகளுக்கான அழகான தூய தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவைபோல அனைத்து பதிவுகளும் மிகப்பயனுள்ளதாக அமைந்திருக்கிறது

 

இத்தளத்தில், ”தமிழ்ச்சரம்” எனும் மற்றொரு தளத்தின் இணைப்பும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்ச்சரம்
தமிழ்ச்சரம்

 

இதைச் சொடுக்கினால் அத்தளம் புதுப்பக்கத்தில் தோன்றி, அதில், ’உலகத் தமிழர்களின் சங்கமம்’ எனும் தலைப்பில், பொது, திரைப்படம், அரசியல், ஆன்மீகம், வீட்டுக்குறிப்பு, வணிகம், புத்தகம், தொழில்நுட்பம், நிகழ்வுகள், காணொளி எனும் பகுதிகள் உள்ளன.

இவை ஒவ்வொன்றையும் சொடுக்கினால், வேறு வேறு தளங்களில் பதிவிட்டு இருக்கிற கட்டுரைகளை எல்லாம் கொண்டுவந்து இங்குத் திரட்டி எனும் அமைப்பில்  தருகிறது. இது ஒரு பயனுள்ள திரட்டியாக
செயல்படுகிறது.

வலைத்தமிழ்ப் பன்னாட்டு மாத இதழின் இணைப்பும், வலைத்தமிழ் மொட்டு என்கிற சிறுவர்களுக்கான பன்னாட்டு மாத இதழின் இணைப்பும் இங்குத் தரப்பட்டுள்ளன.

 

வலைத்தமிழ்ப் பன்னாட்டு மாதஇதழின் ஆசிரியர் குழுவில், 10 ஆளுமைகள் காணப்படுகின்றனர். முதன்மை ஆசிரியராக சா.பார்த்தசாரதி அவர்கள் இருக்கின்றார்,

தமிழ் இணையதளங்களில், பல்வேறு தமிழ் மென்பொருள் சார்ந்த முன்னேற்றங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிற நீச்சல்காரன் அவர்கள் துணை ஆசிரியராகவும் மற்றும் பலரும் இருப்பது சிறப்பாகும்.

”வலைத்தமிழ் மொட்டு” எனும் சிறுவர் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவில் 11 பேர் காணப்படுகின்றனர், அதன் முதன்மை ஆசிரியராகச் செந்தில்நாதன் ராதாகிருஷ்ணன் அவர்கள் உள்ளார்.

சமீபத்தில், 2019-ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும், ஏப்ரல் 2020 இல் ஒரு இதழும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி வலைத்தள இணைப்பும் தரப்பட்டுள்ளது.

’மக்கள் மன்றம்’ எனும் தலைப்பில் கருத்து கணிப்பும் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது.

 

தமிழ்க் கற்கவும், பிழையின்றி எழுதவும் வலைத்தமிழ் அகாடமி  உதவுகிறது. அதற்கெனவே வலைத்தமிழ்  அகாடமி இயங்குகிறது.

இதற்கெனத் தனிதளமும் இருக்கிறது. அதில் இசை கற்றுக்கொள்வதற்கும், இணையத்திலேயே பரதநாட்டியம் கற்றுக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றன.

இது ஒரு மாபெரும் செயல் ஆகும். வெளிநாட்டுவாழ் தமிழ்க் குழந்தைகள் தமிழ் இசை, தமிழர்களின் புராதனமான நாட்டியக் கலை போன்றவற்றை அறிந்து கொள்ள இத்தளம்  மிகப் பயனுள்ளதாக அமையும். இவையும் இக்குழுமத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது.

இத்தளம்,

• 18,000 தமிழ் இணைய முகவரிகள்

• 1,05,000 குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள்

• 4,900 தமிழ் இலக்கிய தொகுப்புகள்

• 1,70,000 வார்த்தைகளுக்குப் பொருள் தரும் தமிழ்அகராதி

• 2,000 சமையல் குறிப்புகள்

• 1300 கோவில்களின் அரிய தகவல்கள்

• பல்லாயிரக்கணக்கான செய்திகள்

• புகைப்படங்கள்

• காணொளிகள்

• இசைப் பயிற்சி

• தமிழ்ப் பயிற்சி

• நடனப் பயிற்சி

எனப் பல்வேறுபட்ட தகவல்களைத் தரும் களஞ்சியமாக விளங்குகிறது.

வலைத்தமிழ்.காம் இணையதளத்தைப் பார்வையிட www.valaitamil.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

 

 

7 Replies to “வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்”

  1. முனைவர் சந்திர சேகரன் அவர்கள் வலைத்தளம் குறித்து
    விரிவாக பதிவு செய்திருப்பது பலருக்கும் பயன்படக் கூடியதாக இருப்பதில் மகிழ்ச்சி…
    இணையம் அறிவோம் தொடர் என் விருப்பமாகவும் இருக்கிறது…
    வாழ்த்திப் பாராட்டுகிறேன்…
    ~கா.அமீர்ஜான்/ திருநின்றவூர்

  2. அருமையான முயற்சி. பன்முகக் கோலங்களில் பயணிப்பதை கண்டு வியக்கிறேன். மேலும் ஐயாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்!

  3. தமிழ் களஞ்சியம் என்ற பெயரிற்கு ஏற்றாற்போல் உள்ளது இந்த வலை தமிழ். இந்த வலையில் வீழ்ந்தோர் கண்டிப்பாக முத்து எடுக்காமல் இருக்க மாட்டார் . அள்ள அள்ளக் குறையாத கலைக்களஞ்சியம். அனைத்து கலைகளையும் கொண்ட ஒரு கூட்டாஞ்சோறு இது . மொத்தத்தில் பசியுடன் தேடுபவர்களுக்கு நல்ல விருந்து. இதை படைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏

  4. ஏற்கனவே வலை தமிழைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்றுதான் முழு தகவல் அறிந்து கொண்டேன்.

    மேலும் இது போல தமிழில் இயங்கிக் கொண்டிருக்கும் வலைதளங்களை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது ஐயா. தங்களின் கட்டுரைகள் தொடரட்டும்.

    வாழ்த்துக்கள் ஐயா

  5. மகிழ்ச்சி ஐயா.

    உங்களுடைய தொடர் ஒரு காலத்தின் கட்டாயம்.

    நீங்கள் முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த செயல் பின்வரும் சந்ததிகளுக்கும் வரலாற்று நெடுங்கணக்கில் பதிவு செய்யப்படும்.

    தொடர்ந்து எழுதுவதும் தொடராக எழுதுவதும் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

    நீங்கள் தொடரை தொடர்ந்து எழுதி வருவது ஒரு முழுமையான வடிவத்தை எல்லோருக்கும் காண்பிக்கும் அல்லது அறிவுறுத்தும் அல்லது தெளிவடையச் செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    நீங்கள் எழுதிய இந்த வலைதள பதிவிலிருந்து ஒன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    எனக்கு வரக்கூடிய மிக எளிய நூல்களிலிருந்து கிடைத்தற்கரிய பொக்கிஷங்களாக விளங்கும் நூல்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

    மகிழ்ச்சி அல்லது நன்றி என்ற இந்த இரு வார்த்தைகளுக்குள் ஒரு உணர்வு பொதிந்திருப்பதை போல இந்தத் தொடர் எனக்கு அவ்வளவு உகந்ததாக இருக்கிறது.

    எதிர்காலத்தில் தேவையைக் கருதி ஒரு கட்டுரையாகவோ அல்லது ஒரு நூலாகவோ வெளிக்கொணர்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதுவரை நான் இந்தத் தொடரை தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறேன்.

    நன்றி.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.