வழிகாட்டுதல் ‍- சிறுகதை

குழந்தைகளுக்கு, எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் வேண்டும்.

பெற்றோர்களில் சிலர், சூழ்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள, குழந்தைகளை நேரடியாகப் பழக்குவது இல்லை.

ஒரு சூழ்நிலையில் நடந்து கொள்ளச் சொல்லும்விதம், மற்றொரு சூழ்நிலைக்குப் பொருந்துவது இல்லை.

ஆதலால் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று , குழந்தைகளுக்கு நன்கு விளக்கிப் புரிய வையுங்கள்.

ஒரு தாய் சொன்ன சொல்லை தவறாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு நடந்து கொண்ட சிறுவனின் செயலைத்தான் வழிகாட்டுதல் என்ற இக்கதையில் இருந்து அறிந்து கொள்ளலாம். வாருங்கள் நிகழ்ச்சி பற்றிப் பார்ப்போம்.

சாந்தன் குறும்புக்கார சிறுவன். ஒருநாள் அவனுடைய அம்மா, அவனை விருந்து ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்.

விருந்திற்கு வந்திருந்த உறவினர்களுடன் சாந்தனுடைய அம்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தனுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உடனே அம்மாவிடம் “நான் ஒன்னுக்கு போகனும்மா” என்றபடி ஒற்றை விரலை நீட்டினான்.

அம்மாவோ, உறவினர்கள் முன்னிலையில் தன்னுடைய மகனின் செயலை மரியாதைக் குறைவாக‌க் கருதினார். உடனே சாந்தனை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

பாட்டுப் பாட வேண்டும்

சாந்தனிடம் “இனிமேல் உனக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், எனக்கு பாட்டுப் பாட வேண்டும் என்று சொல்.” என்று அம்மா கூறினார்.

அதனைக் கேட்டதும் சாந்தனும் “சரி அம்மா” என்றான்.

நாட்கள் நகர்ந்தன; மற்றொரு நாள் சாந்தனுடைய அம்மா அவனுடைய பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.

அன்றைய இரவில் சாந்தன் தன்னுடைய தந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது.

உடனே தன் தந்தையை எழுப்பி “அப்பா, எனக்கு பாட்டு பாடணும்” என்றான்.

அவனுடையே தந்தையோ “என்னடா, உனக்கு நேரங்கெட்ட நேரத்தில் பாட்டுப் பாட வேண்டிய கெடக்கு. சரி, பக்கத்தில் எல்லோரும் தூக்கிக்கிட்டு இருக்காங்க. அதனால நீ சத்தம் இல்லாம என் காதல மட்டும் பாடு” என்றார் கண்ணை மூடி படுத்துக் கொண்டே.

“என்னப்பா, சொல்றீங்க. உங்க காதுலயா பாட?” என்று சாந்தன் கேட்டான்.

அதற்கு “ஆமாம்டா” என்றார் அவர் மறுபடியும்.

உடனே சாந்தன் தன்னுடைய அறியாமையடன் கூடிய குறும்புதனத்தைக் காட்டினான்.

சிறிது நேரத்தில் சாந்தனுடைய அப்பா சாந்தனை அடிக்கும் சத்தமும், சாந்தனின் அழுகைக் குரலும் கேட்டு, பக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து விவரத்தைக் கேட்டு சிரித்தனர்.

ஆதலால் பெற்றோர்களே, உங்களுடைய குழந்தைகளுக்கு, எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் பெருமை, சிறுமை பற்றி யோசிக்கக் கூடாது; பொறுமைதான் மிக வேண்டும்.

இல்லையேல் சாந்தனைப் போல, உங்களுடைய குழந்தைகளின் செயலும் எள்ளி நகையாடப்படும்.

One Reply to “வழிகாட்டுதல் ‍- சிறுகதை”

  1. சிறுகதை சிறப்பு மிகச் சிறப்பு.நகைச்சுவையோடு நல்ல கருத்து. பாராட்டுகள்.
    -செல்லம்பாலா, சென்னை.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.