வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை

வாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.

அன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.

கைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.

“ஹலோ, கதிர் எப்படி இருக்க?”, என்று எதிர்முனையில் உரிமையுடன் குரல் ஒலித்தது.

“ம்..ம்.. நல்லா இருக்கேன். நீங்க யாருன்னு தெரியலயே” என்றான் கதிர் யோசித்துக் கொண்டே.

“என்ன கதிர் இப்படி சொல்லிட்ட. நான்தான் முகிலன். இப்ப ஞாபகம் இருக்கா?”

“ஏய்… முகில், எப்படிடா இருக்க?”

“நல்லா இருக்கேன். இப்பதான் உன்னோட நம்பர நம்ம ஜீனியர் கண்ணன்கிட்ட வாங்குனேன். கண்ணன் நீ வேலை பாக்கற கம்பெனியிலதான வேலை பார்க்குறானாம்.

நீ ஆந்திராவுல இருக்கன்னு சொன்னான். உன்ன கான்டாக்ட் பண்ண எவ்ளவோ முயற்சித்தேன். முடியல. நீ என்ன பேஸ்புக்லகூட இல்லையா?”

“எதுக்கு பேஸ்புக்ல இருக்கணும். நம்மளோட சொந்த வாழ்க்கைய‌, எதுக்கு வெளி உலகத்துக்கு வெளிச்சம் போடணும். எனக்கு அது பிடிக்கல. அதனால பேஸ்புக்ல இல்ல.”

“சரி, சரி… உனக்கு எத்தன பிள்ளைங்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க?”

“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. அம்மா, அப்பா நல்லா இருக்காங்க. உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

 

“நல்லா இருக்காங்க, ஆங்… கதிர், நம்ம காலேஜ் கிளாஸ்மேட்ஸ் வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பிச்சிருக்கோம். உன்னத் தவிர எல்லோரும் அதுல இருக்காங்க.

உன்ன எப்படியாவது கண்டுபிடிச்சி குரூப்ல சேர்த்திரணும்னு நினைச்சேன். இப்ப உன்னக் கண்டுபிடிச்சுட்டேன். உன்னோட நம்பர சேவ் பண்ணுறப்ப, நீ வாட்ஸ் ஆப்ல இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டேன்.

இப்பவே உன்ன நம்ம குரூப்ல சேர்த்து விடுறேன். நம்ம ப்ரெண்ட்ஸ்கிட்ட இனி நீயும் பேசலாம்.” என்று கூறி முகிலன் விடை பெற்றான்.

முகிலன் சொன்னதுபோல கதிரை 97 மெஜஸ்டிக் மெக் என்று இருந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து விட்டான்.

கோவையின் முன்னணி பொறியியல் கல்லூரி ஒன்றில், 1997-ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஞ்சினியரிங் முடித்து வெளியேறியது, இப்போது நடந்ததுபோல் கதிரின் நினைவிற்கு வந்தது.

சிறிது நேரத்தில் கதிரை வரவேற்று, 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பில் நிறைய குறுஞ்செய்திகள் எல்லா நண்பர்களிடமிருந்தும் வந்திருந்தன.

 

கல்லூரியின் இறுதி நாட்களில் நடந்த சம்பவம், கதிரின் நினைவில் இருந்துகொண்டே இருந்ததால், அவனுக்கு அவர்களுக்கு பதிலளிக்க பிடிக்கவில்லை.

அதன்பின்பு வந்த நாட்களில் குரூப்பில், நண்பர்கள் யாருக்கேனும் பிறந்தநாள் வாழ்த்து, திருமணநாள் வாழ்த்து, காலை, இரவு வணக்கங்கள், காரசாரமான அரசியல், ஆன்மீக விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.

சிலநேரங்களில் விவாதங்களில் சண்டை ஏற்பட்டு ஒரு சிலர் வெளியேறுவதும், அவர்களை முகிலன் குரூப் அட்மின் என்ற முறையில் சமரசம் செய்து, அவர்களை மீண்டும் சேர்ப்பதுமாக நடந்து கொண்டிருந்தது.

கதிரோ எந்த குறுஞ்செய்தியும் குரூப்பில் அனுப்புவதில்லை. இரண்டு தடவை குரூப்பை விட்டு வெளியேறியபோதும், முகிலன் அவனை மீண்டும் குரூப்பினுள் இணைத்து விட்டான். அதன்பின்பு கதிர் 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பினை பார்ப்பதுகூட கிடையாது.

அதிர்ச்சி செய்தி

ஒருநாள் தற்செயலாக அலுவலக செய்தி அனுப்புவதற்காக கைபேசியை திறந்தபோது, 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பில் வேலன் அபாய கட்டத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்திருந்ததை கைபேசியின் திரை காட்டியது.

அதிர்ச்சியில் கதிர் அவசரமாக 97 மெஜஸ்டிக் மெக் குரூப்பினை திறக்க எண்ணியபோது, 2978 வாசிக்காத குறுஞ்செய்திகள் இருப்பதாக கைபேசி காட்டியது. கதிர் எல்லாவற்றையும் நொடியில் தள்ளிவிட்டு, கடைசியாக வந்த வேலன் பற்றிய செய்தியை வாசித்தான்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் வேலன், திடீரென கல்லீரல் பாதிக்கப்பட்டு அபாயகட்டத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தற்கான, மருத்துவமனை அறிவிப்பினை படம் பிடித்து போடப்பட்டிருந்தது.

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் சிலர், உடன்படித்து சென்னையில் இருக்கும் கணபதி, சேகர் ஆகியோரை மருத்துவமனைக்கு நேரில் சென்று, நம்முடைய வேலனா அவன்? என்பதை அறிந்து தெரியப்படுத்த வேண்டினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது நம்முடைய வேலன்தான்.

வேலனின் தம்பியிடமிருந்து கல்லீரலின் பாதியை எடுத்து, மறுநாள் மதியம் அறுவைச்சிகிச்சை மூலம் வேலனுக்கு வைக்க இருப்பதாகவும், உடனடியாக 30லட்சங்கள் தேவையென்றும் கணபதியும் சேகரும் குறுஞ்செய்தி அனுப்பிருந்தனர்.

 

உடனே 97 மெஜஸ்டிக் மெக் குரூப் நண்பர்கள் தங்களால் முடிந்த பணஉதவிகளை வேலனுக்கு செய்வதாக செய்திகளை அனுப்பினர்.

முகிலன் கணபதியின் வங்கிக் கணக்கிற்கு எல்லோரும் பணத்தினை அனுப்புமாறு கேட்டுக் கொண்டு வங்கி கணக்கு எண்ணையும் குரூப்பில் அனுப்பியிருந்தான்.

முகிலனின் செய்தி வந்ததும் நண்பர்கள் எல்லோரும் பணத்தினை அனுப்பத் தொடங்கினர். கதிரும் தன் பங்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தான்.

பத்துமணி நேரத்தில் கணபதியின் வங்கிக்கணக்கிற்கு மொத்தம் 28 லட்சங்கள் நண்பர்களால் அனுப்பப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது.

வேலன் விரைந்து சுகம் பெற குறுஞ்செய்திகள் குரூப்பில் வந்து கொண்டே இருந்தன.

 

கதிருக்கு பொறியியல் படிப்பின் இறுதியாண்டு நினைவிற்கு வந்தது.

வேலனும், கதிரும் இணைந்தே இறுதியாண்டிற்கான பிராஜெக்ட் செய்தனர். அந்த சமயத்தில் கதிருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.

வேலன் கதிரை எதிர்பாராது பிராஜெக்ட்டுக்கு வேண்டியவற்றைச் செய்து அதனை நல்லபடியாக முடித்தான்.

 

இறுதியாண்டு கல்லூரி வகுப்புகள் முடிவதற்கு இருவாரங்களுக்கு முன்பு, சகவகுப்புத் தோழன் மதி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் கால்குலேட்டர்களை திருடிவிட்டு, கதிர்தான் கால்குலேட்டர்களைத் திருடியதாக வார்டனிடம் மாட்டிவிட்டான்.

வார்டனும் சரிவர விசாரிக்காமல், கதிரை விடுதியை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். வகுப்பு நண்பர்களும் கதிரை திருடன் என்றே கருதி செயல்பட்டனர். இதனால் கதிர் கடைசி இருவாரங்கள் கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரிப் படிப்பை முடித்தான்.

இறுதியாண்டு தேர்வின்போது நடந்த உண்மைகளை வகுப்பு நண்பர்கள் கண்டறிந்து வார்டனிடம் தெரிவித்தனர். கதிரிடம் மன்னிப்பும் கேட்டனர். ஆனால் கதிருக்கு ஏனோ அவர்களுடன் ஒட்ட விருப்பமில்லை. நாட்கள் நகர்ந்தன.

கதிரும் நல்ல வேலையில் அமர்ந்து திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான். எனினும் கல்லூரி நண்பர்களுடன் மட்டும் தொடர்பில்லாமல் இருந்தான்.

 

கதிர் மறுநாள் 12மணிக்கு குரூப்பினை பார்த்தபோது, கணபதியும் சேகரும் மருத்துவமனைக்குச் சென்று, வேலனின் மனைவியிடம் பணத்தை அளித்ததாகவும், அறுவைச்சிகிச்சைக்குப்பின் வேலனும், தம்பியும் நலமுடன் இருப்பதாகவும் குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஐந்து நாட்கள் கழித்து வேலனுக்கு உணவு வழங்கப்பட்டு, நன்கு செரிமானம் ஆகிவிட்டதாக குரூப்பில் செய்தி வந்திருந்தது.

97 மெஜஸ்டிக் மெக் குரூப் வாட்ஸ் ஆப் செய்த நன்மை கதிரை மெய்சிலிர்க்க வைத்தது. நண்பனின் உயிர் காப்பாற்றப்பட்டத்தை நினைத்ததும் வாட்ஸ் ஆப் பார்த்து சலுயூட் அடித்தான் கதிர்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.