விறன்மிண்ட நாயனார் – வன்தொண்டரைப் புறக்கணித்தவர்

விறன்மிண்ட நாயனார் சிவனடியார்களை வணங்காது சென்ற சுந்தரரை புறகு என்று ஒதுக்கித் தள்ளிய வேளாளர். நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். திருத்தொண்ட தொகையை சுந்தரர் பாடக் காரணமாக இருந்தவர். அவரின் கதையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.

விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.

அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இறைவனுடைய திருவருள் சிறப்பை எல்லோரும் உணரும்படி தம்முடைய ஒழுக்கத்தின் சிறப்பால் வெளிப்படுத்துபவர்கள் சிவனடியார்கள். ஆதலால் அரனின் அடியார்களின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் விறல்மிண்டர்.

ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.

ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.

திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.

திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.

பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.

அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தர‌ர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.

“இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்” என்றார் விறல்மிண்டர்.

“அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்” என்றனர் அருகில் இருந்தவர்கள்.

“அடியார்களை மதிக்காது செல்லும் வன்தொண்டருக்கு அருள்புரியும் ஆரூராரும் எனக்கு புறம்பானவரே” என்று கோபத்துடன் கூறினார்.

விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் ‘இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது. அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்’ என‌ மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.

“இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.

இறைவனாரும் தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன் என்ற அடியைஎடுத்துக் கொடுக்க‌, அதனையே முதலடியாகக் கொண்டு திருத்தொண்டர் தொகையைப் பாடி தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கினார் சுந்தரர்.

அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.

விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.

விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன் என்று வியக்கிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.