விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை

சுஜித்துக்கு இந்த உணவு டெலிவரி செய்யும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் எம் பி ஏ படித்து முடித்திருப்பான்.

எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. எம் பி ஏ இரண்டாவது செமெஸ்டரிலேயே அப்பா இறந்துவிட்டார். அப்பாவுடன் ஆஸ்ப்பிட்டலில் இருந்ததால் ஒரு சில பேப்பரை தவிர எல்லாமுமே அரியர்.

நீச்சல் தெரியாதவனை நடுக்கடலில் தூக்கி போட்டது போல், காலம் சுஜித்தை தூக்கி எறிந்து விட்டது. உடனடியாக இந்த வேலைதான் கிடைத்தது.

அப்பாவின் டூ வீலரை ஆசைக்கு கூட ஓட்டிப் பார்க்கத் தரமாட்டார். இப்போது மொத்த வாழ்க்கையும் இந்த டூ வீலரில் கழிகிறது.

12 மணிக்கு கிளம்பி இரண்டரை மணிவரை, கடும் வெயிலில் 3 சாப்பாடு பொட்டலத்துடன் அலைகிறான். இன்னும் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் எத்தனை ஜீவா நகர்களோ? அப்பப்பா கூகுள் மேப்பே குழம்பித் தவிக்கிறது.

ஆர்டர் கொடுத்தவர்கள் குறைந்தது 25 முறை போன் செய்து விட்டார்கள். ரொம்ப அசிங்கமாக திட்டுகிறார்கள். அவர்களுக்கு பசி எடுத்திருக்கும். லெப்ட், ரைட் என்று மேலும் குழப்பி இந்த பொட்டல் திடலில் வண்டி வந்து நிற்கிறது. உச்சி வெய்யிலில் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறான்.

சுஜித்துக்கு வாழ்க்கையே சூன்யமாகப் பட்டது. இந்த வேலையும் பிடிக்கவில்லை. வேலைக்கு போகாமல் இருந்தால், அம்மா வீட்டு வேலை செய்து சம்பாரிக்கும் காசில் தண்ட சோறு சாப்பிட வேண்டும். அதுவும் வலி நிறைந்தது.

நிறைய முறை செத்து விடலாம் என்று நினைக்கிறான். அம்மாவும் தங்கையும் என்ன செய்வார்கள் என்ற கவலை வந்து கண்ணை நிறைக்கும்.

சுஜித் விரக்தியின் விளிம்பிற்கு வந்து விட்டான். நாம் உயிரோடு இருந்து என்ன செய்து கிழிக்க போகிறோம்? அம்மாவுக்கு பாரமாக இல்லாமல் நாம் சாவது தான் மேல்.

‘இன்று இரவு ஏதாவது ஒரு ரயிலில் தலையைக் கொடுத்து செத்துவிட வேண்டும்’ என்று சுஜித் யோசித்து கொண்டு பொட்டல் திடலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

கம்பெனியிலிருந்தும், வாடிக்கையாளர்களிட‌மிருந்தும் போன்கள் வந்து கொண்டே இருந்தன.

சுஜித் எந்த போனையும் எடுக்கவில்லை.

‘அப்பா என்னை மன்னித்துவிடு. நீ இருக்கும் இடத்திற்கே நானும் வரப் போகிறேன். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை அப்பா. நீ ஏம்பா என்னை விட்டு விட்டு செத்து போனாய்?’ சுஜித்துக்கு கண்ணில் நீர் திரண்டு தொண்டை வறண்டது.

திடீரென்று யாரோ பைத்தியம் ஒருவன் தாடியும் தலையுமாய், கழுத்தில் செத்தவர்கள் போட்டோவில் போடும் சந்தன மாலையை போட்டபடி, கிழிந்த அழுக்கு சட்டையுடன் சுஜித்தின் முன் வந்து நின்று, பழுப்பேறிய பற்கள் தெரிய சிரித்தான்.

சுஜித்துக்கு கோபம் கொப்பளித்தது. “டேய் மரியாதையா போய்டு; நானே செம கடுப்பில இருக்கேன்.” என்று அதட்டினான்.

பதிலுக்கு அந்த பைத்தியம் “நீ அட்ரஸ் தெரியாமதானே அலையிறே, நீ தேடுற வீட்டுக்கு பின்பக்கம் தான் நீ நிக்கறே; முன்பக்கம் தெருவுக்குப் போ” என்று சொல்லிவிட்டு விறுவிறு வென்று போய் விட்டது.

சுஜித் அந்த இடத்தில் ஒரு வீடு இருப்பதை அப்போது தான் பார்க்கிறான். வண்டியை ஸ்டார்ட் செய்து முன்பக்கம் போனான். அதே 17 நம்பர் வீடு.

லேட்டா வருவதற்கு திட்டுவார்களோ, இல்லை அடிப்பார்களோ என்ற பயத்தில் காலிங் பெல்லை அடித்தான். ஒரு வயதான அம்மா வெளியில் வந்தாள்.

“அம்மா என்னை மன்னிச்சுடுங்க. வழி கண்டுபிடிக்க முடியல அதான் லேட்” என்று தயங்கி தயங்கி சொன்னான்.

“பரவாயில்லைப்பா ஓலா, உபேர் வண்டிகூட இதான் சொல்றாங்கப்பா.” என்று சொல்லிக் கொண்டே பார்சலை வாங்கிக் கொண்டு பணத்தை செட்டில் செய்தாள்.

“அதெப்படிப்பா இப்பதான் யாரோ ஒரு பைத்தியக்காரன் இன்னும் 5 நிமிஷத்தில உங்க சாப்பாடு வரும்ன்னு சொன்னான். கரெக்ட்டா வந்துட்டியே” என்று கேட்டாள்.

சுஜித்திற்கு ஒரே ஆச்சர்யம். அந்த பயித்தியகாரன் இங்கும் வந்து சொல்லிவிட்டு போயிருக்கிறான்.

உடனே வண்டியை திருப்பிக் கொண்டு வந்து அந்த பைத்தியக்காரனை தேடினான். எங்கும் கிடைக்கவில்லை. ‘அவனுக்கு எப்படி தெரியும், யார் அவன்?’ சுஜித்திற்கு ஒரே ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது.

உடல், மனச்சோர்வு எல்லாம் மறைந்து அந்த பைத்தியக்காரன் நினைவாகவே வீடு வந்து சேர்ந்தான்.

அம்மா யாருமற்ற தெரு வாசலில் உட்கார்ந்து இருந்தாள்.

“ஏம்மா படுத்து தூங்க வேண்டியது தானே?” என்று கேட்டான்.

“தூங்கிட்டுதான் இருந்தேன். அப்பா குரல் கேட்ட மாதிரி இருந்த‌துடா. அதான் வெளிய வந்து உட்கார்ந்து இருக்கேன்.” என்று சொன்னாள்.

அம்மாவுக்கு எப்பதும் இதே மாதிரி அப்பாவின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

“நீ கை கால் அலம்பிட்டு வா, வந்து சாப்பிடு, ரொம்ப லேட்டா வந்தா எப்படிப்பா?” என்று கடிந்து கொண்டாள்.

சுஜித் முகம் கழுவி துடைத்து, அப்பா போட்டோவைப் பார்த்தான். இதே சந்தன மாலைதான் அந்த பையித்தியக்காரன் கழுத்திலும் இருந்தது.

“இந்த மாலை தாம்மா அவனும் போட்டிருந்தான்.” சுஜித் வேகமாக கத்தினான்.

“எந்த மாலை? யாரு போட்டிருந்தா? முதல்ல நீ வந்து சாப்பிடு.” அம்மா சுஜித்தை அதட்டினாள்.

அம்மாவிடம் எதுவும் சொல்ல கூடாது. நாம வேலை கஷ்டம், தற்கொலை முடிவு இதெல்லாம் தெரிந்தால் அவ்வளவுதான்.

சுஜித் அந்த பைத்தியம் பற்றி யோசித்து கொண்டே சாப்பிட்டான். ‘அது நம் அப்பாவா ?
அப்பாதான் செத்து விட்டாரே, பின் யாரவர்?. எப்படி சரியான நேரத்தில் வந்து எனக்கு வழி சொன்னார்? அம்மாவையும் எழுப்பி விட்டிருக்கிறார். ஆர்டர் கொடுத்தவன் வீட்டுக்கும் போயிருக்கிறார். பின்பு எங்கு போனார்?’

சுஜித்துக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

நண்பர்களுக்கு போன் செய்து விபரம் சொன்னான். “அது ஒன்னும் இல்ல மச்சி, வெயில்ல ரொம்ப சுத்தினா இதுமாதிரி பிரச்சினை வரும். பயப்படாதே, நல்லா தூங்கு மச்சி” என்று கலாய்த்து தள்ளினார்கள்.

சுஜித் அந்த பெரும் ஆச்சர்யத்தில் இருந்து வெளி வர முடியமால் தவித்தான் .

அப்பாதான் அது. நான் சாக முடிவு எடுத்தது அப்பாவுக்கு தெரிந்து விட்டது.

“அப்பா, நீயாப்பா வந்த? எனக்கு சாகிற எண்ணமே போயிடுச்சுப்பா. நான் அம்மா, தங்கச்சியைப் பாத்துக்கிறேன்பா. அப்பா நீ என் கூடவே இருப்பா. நான் நீ ஆசை பட்ட மாதிரி எம் பி ஏ படிக்கிறேன்பா. அரியர் எல்லாம் எழுதி முடிக்கிறேன்பா. வேற நல்ல வேலை தேடறேன்பா.” சுஜித் தனக்கு தானே பேசிக்கொண்டான்.

அடுத்த நாள் சுப்பிரமணி சாருக்கு போன் செய்தான். அவர், அவன் படித்த கல்லூரியில் ஆசிரியர். அப்பா இறந்த போது வீட்டுக்கு வந்திருந்தார். வகுப்பில் நிறைய கதைகள் சொல்பவர்.

“சார் நான் சுஜித் பேசுறேன்.”

“சொல்லு சுஜித்.”

“சார் நான் எம் பி ஏ அரியர்ஸ்ச‌ இப்ப எழுதலாமா சார்?”

“கண்டிப்பா சுஜித்.”

“நன்றி சார், நீங்க எப்படி, எங்க இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். வேற காலேஜில வேலை செய்யிறேன் சுஜித். நீ எப்படி இருக்க?. உன் வேலை எப்படி போகுது? ஏதாவது உன் அனுபவத்தைச் சொல்லு பார்க்கலாம்.” என்றார்.

சுஜித்துக்கு மறுபடியும் ஆச்சர்யம். ‘இவருக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ? அந்த பையித்தியம் இவரிடமும் வந்திருக்குமோ? இல்லை பொதுவா கேட்கிறாரா?’

நேற்று நடந்தவற்றை எல்லாம் சுஜித் அவரிடம் சொன்னான் .

“அது உன் அப்பாதான்.” என்று அடித்து சொன்னார்.

“ஒரு உருவமாய் தெரிந்த அரூவம். உடல்தான் அழிந்து விடுகிறது. ஆன்மா இங்குதான் இருக்கிறது. உன் அப்பாவின் ஆன்மாவும் உன்னை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது அவர் நிறுத்திய மூச்சு காற்றை நீதான் சுவாசிக்கிறாய்.”

“சார் இந்த கதையை உங்க கிளாஸ்ல சொல்லுவிங்களா சார்?”

“சொல்றேன் சுஜித்.”

“நம்புவாங்களா சார்?”

“இப்ப நம்ப மாட்டாங்க சுஜித். அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு, அனுபவித்து உன்னைப்போல் நம்புவார்கள்.

இந்த கதையை எழுதலாமா சுஜித்?”

“தாராளமா எழுதுங்க சார். எழுதுனா என்ன பேர் வைப்பிங்க சார்?”

“விளிம்பில் நிகழும் அற்புதங்கள்.”

முனைவர் க. வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

4 Replies to “விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை”

  1. Oh my god.. A different genre… வாழ்க்கையில் திடீரென்று நிகழும் அதிசயங்கள் மனதில் என்றும் பதிந்திருக்கும்.. அப்படிப்பட்ட ஒரு சிலாக்கியமான அனுபவத்தைப் பற்றி படித்தது, அதுவும் உங்கள் நடையில் மனதை இலேசாக்கியது. கூற உவந்த கருத்தை தெளிவாக கூறி முடித்து பாராட்டத்தக்கது. நன்றி. காத்திருப்பு தொடரும்….❤️❤️❤️❤️

  2. அதீத ஆற்றல் இவ்வுலகை ஆள்கிறது. காலம் காலமாக நாம் நம்புகிறோம்.

    அதிலொன்று இறந்தவர் நம்மோடு ஸ்தூலமாக இருக்கிற வகை.

    ஆன்மா, தேகம் , நினைவு, தீர்க்கம் என்பவையெல்லாம் ஆன்மீகம் தரும் பாடம்.

    கதை வேறு நிலை…

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.