வீட்டுக்கு வந்த தேவதை

சிறுவயதில் தேவதை பற்றிய கதைகளைப் படித்திருக்கிறேன். அத்தனையும் கிரேக்கப் புராணக் கதைகள் தாம். சிண்ட்ரல்லா பற்றி, நான் அக்கதைகள் மூலம் தான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.

அக்கதைகளில் வரும் தேவதை போன்று ஒரு தேவதை நம்மோடு ஒரு மாதம் வாழ்ந்திருந்தால் அந்த அனுபவம் எப்படியிருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள். அது போன்று ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ‘சிவகாசி புராஜெக்ட் அப்ராட் விஜய்’ மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்த தேவதை தான் ‘மார்கரெட் பியர்மென்’.

04.07.2009 அன்று மார்க்ரெட் பியர்மென் வீட்டிற்கு வருகிறாள் என அறிந்ததும், நானும் என் மனைவியும், மகளும் கற்பனையில் அவளை மனக்கண்ணால் கண்டோம். அவளுக்காக வீட்டிலுள்ள பெரிய படுக்கையறையைத் தயார் செய்தோம். ஏனோ தெரியவில்லை, எங்களுக்கு அவள் வருகை இனம் தெரியாத மகிழ்ச்சியைத் தந்தது.

அன்று சனிக்கிழமையாக இருந்ததால் நானும் அலுவலக வேலைகளை அவசர அவசரமாக முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று காத்திருந்தேன்.

சுமார் பன்னிரெண்டரை மணியளவில் ஒரு தேவதைபோன்று சிரித்துக் கொண்டே ‘ஹாய்’ என்று கூறிய படி அவள் மாடிப்படி ஏறிவந்த காட்சி மிகவும் ரம்மியமானது. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம்.

அவளின் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டு நண்பகல் சாப்பாட்டிற்கு வரக்கூறினோம். அவளும் தயாரானாள். உடைகளை மாற்றிவிட்டு எங்களுடன் சேர்ந்தே சாப்பிட்டாள். சாப்பிடும்பொழுதே குடும்பப் பின்னணியை ஒருவருக்கொருவர் விசாரித்துத் தெரிந்து கொண்டோம்.

தமிழர்களின் உடையலங்காரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கு வரும்வரை பெண்கள் உடையலங்காரத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் என்றவள் உடனே தனக்கு சேலை கட்டிவிடக் கேட்டுக் கொண்டாள். பெண்களுக்கு சேலை உடனே கட்டுவது என்றால் அதற்கு உள்ளாடை, மேலாடை என்று பலவழிமுறைகள் உள்ளன.

என் மனைவியுடன் அவள் ஜவுளிக்கடைக்கு சென்றுவந்தாள். ஜாக்கெட் தைக்க வேண்டுமே, பக்கத்து வீட்டு நந்தாவிடம் அவளை அழைத்துச் சென்று அவசர அவசரமாக ஜாக்கெட் தைத்து, அழகுக் கலையில் ஆர்வம் உள்ள நந்தாவே சேலை கட்டி, பூ வைத்துத் தமிழ்ப் பெண்ணாக மாற்றிவிட்டாள். நந்தாவும் மார்க்ரெட்டும் சிநேகிதிகளாக மாறிவிட்டனர்.

என்னிடம் வழக்கமாக எத்தனை மணிக்குப் படுக்கை அறைக்குச் செல்வீர்கள்? என்று கேட்டாள். நான் இரவு ஒன்பது மணி என்றேன். இதனை மனதில் வைத்திருந்து தினமும் 8.45 மணிக்குத் தன் அறைக்குச் சென்று விடுவாள். செல்லும்முன் ஏதோ வெளியூர் செல்பவள் போல் விடைபெற்றுக் கொள்வாள்.

அறைக்குச் சென்றபின் தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்தியைக் கேட்பாள். தன் லேப்டாப்பில் இருக்கும் இசைப்பதிவுகளில் விரும்பியதை மென்மையாக இசைக்கவிட்டுக் கேட்டு மகிழ்வாள்.

ஒருநாள் கம்ப்யூட்டரிலுள்ள இசைப்பதிவுகள் பற்றிக் கேட்டபோது சுமார் 18,000 பாடல்கள் பதிவு செய்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுவிட்டேன். அதை நானும் பார்த்தேன்.

அதில் நம் இந்திய இசைஅமைப்பாளர்கள் விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான் இசைகளும் இருந்ததை அவசியம் இங்குக் குறிப்பிட வேண்டும். உலகத்தில் உள்ள மிகச்சிறந்த இசைப்பாடல்கள் அவளுக்குப் பிடித்து இருந்தது. இசைக்கு ஏது மொழி?

என் வீட்டில் பல அறைகள் இருந்ததால், என்னிடம் உங்கள் அறை எது? உங்கள் மனைவி அறை எது? மகளின் அறை எது? எனக் கேட்டாள்.

நான் அவளிடம் இந்தியக் கலாச்சாரத்தில் பெரும்பாலும் குழந்தைகள் தாயுடனே வளர்வார்கள். கூட்டுக்குடும்பக் கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்புக் கூறுகளில் ஒன்று என்றதும் ஆச்சர்யமடைந்தவளாக, அவர்கள் நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் இருக்கும்.

குழந்தை பிறந்த உடனேயே அதன் அறையில் அதன் அழுகுரல் கேட்க வசதி செய்திருக்கும் என்றவள் ஒரு வேடிக்கையையும் கூறினாள். மார்க்ரெட்டின் அக்காள் கரோலின் சிறுவயதில் தன் அறையில் இருக்கப் பயந்து அம்மாவின் அறைக்கதவைத் தட்டித் தட்டி அழுவாளாம்.

இதனைக் கேட்ட என் மனைவி அப்படி வளர்ந்ததால்தான் எந்தவித உதவியும் இன்றி சிறுவயதிலேயே உலகைச் சுற்றி வருகிறார்கள்.

நம் நாட்டில் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்த பின்னரும், அப்பிள்ளைகள் அம்மாவின் பின்னாலேயே இருக்க ஆசைப்படுகிறார்கள் என்ற கூறினாள்.

சற்று யோசித்துப் பார்த்தால் அதிலும் உண்மை இருக்கிறது. வாழைக்கன்று அன்னையின் நிழலில் வளர்வது போல் வளர்கின்றனர்.

இரவில் என் மகள் பிருந்தாவிற்கு வீட்டுப்பாடம் எழுத உதவுவாள். இருவரும் பலூனை வைத்து விளையாடுவார்கள். வீட்டில் மறைந்திருந்து விளையாடுவார்கள். ஊஞ்சலில் இருந்து விளையாடுவார்கள். நடனமாடி விளையாடுவார்கள். பாடல்பாடி விளையாடுவார்கள். படங்கள் வரைந்து விளையாடுவார்கள்.

ஒரு நாள் எங்களிடம் உங்கள் திருமணம் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்ததா? அல்லது நீங்கள் இருவரும் விரும்பித் திருமணம் செய்து கொண்டீர்களா? எனக் கேட்டு விட்டாள்.

நாங்கள் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்று கூறியதும் ஆச்சரியப்பட்டாள். நீங்கள் உங்கள் மகளுக்கும் அப்படித்தான் செய்து வைப்பீர்களா? என்று கேட்டாள்.

‘ஆம்’ என்று சொன்னதும் ஆச்சரியம் அடைந்தவளாக ‘எங்கள் நாட்டில் நாங்கள் விரும்புகிறவர்களைத் திருமணம் செய்துகொள்வோம். எங்கள் பெற்றோர்கள் மறுப்புச் சொல்வதில்லை. திருமணத்திற்கு முன் இருவரும் பேசி, பழகி, பின்னர் திருமணம் பற்றி முடிவுக்கு வருவார்கள்’ என்று கூறினாள்.

மார்க்ரெட் திருமணம் எப்பொழுது? என்று நான் கேட்டுவிட்டேன். அவள் அமெரிக்காவில் கலிபோர்னியா டெலிவிஷனில் அனிமேஷன் இஞ்சினியராக இருக்கும் என் அக்காள் கரோலின் 27 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நானும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். சமூகசேவை செய்ய இருக்கிறேன் என்றாள். என் அம்மாவின் சகோதரி ஒருவரும், அப்பாவின் சகோதரர் ஒருவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை என்றாள்.

என் வீட்டில் மார்க்ரெட் வராண்டா – ஹால் – கிச்சன் என அவள் உலவி வந்தது ஒரு தேவதை உலவி வந்தது போன்று இருந்தது. சாப்பிடும்பொழுது டைனிங்டேபிள் முன் அமர்ந்து நான் உங்களைப் போல் கையால் சாப்பிடப் போகிறேன் என்றாள். குழம்பைச் சாதத்தில் எப்படி விரவிச் சாப்பிட வேண்டும் என்று செய்து காட்டினேன்.

அவள் தன் கை விரல்களை மிக்சியின் பிளேடு போன்று சாதத்தைச் சுழற்றிச் சுழற்றிச் சாப்பிட்டாள். தன் விரல்களால் மிகவும் குறைந்த அளவே உணவை எடுத்து அண்ணாந்து வாயில் இட்டாள். நான் சிரமப்பட வேண்டாம் என்று ஸ்பூன் உபயோகித்துக் கொள்ளக் கேட்டும் மறுத்துவிட்டாள்.

அவர்கள் ஊரில் தோட்டத்தில் வாழை மரங்கள் உள்ளனவாம். ஆனால் வாழை இலையைப் பிளேட் போலப் பயன்படுத்தலாம் என்பது எங்களுக்குத் தெரியாது என்றாள்.

இனி ஊருக்குச் சென்று வாழை இலையில் சாப்பிடுவோம் என்று கூறிச் சிரித்தாள். சாப்பாட்டில் மூன்று நேரமும் ஆடு – கோழி – பீப் தான் சாப்பிடுவோம் என்று கூறியவள், காய்கறி சாப்பிடத் தயக்கம் காட்டினாள். அரிசிச் சாதம் சாப்பிடுவதில்லை – இட்லி வேண்டவே வேண்டாம் – தோசை புளிக்கும் அதுவும் வேண்டாம் என்றாள். இனிப்பும் வேண்டாம் என்றாள். எதைச் சாப்பிட்டாலும் குறைந்த அளவே சாப்பிட்டாள்.

இதனால் எங்களுக்குத் தனியாகவும், அவளுக்குத் தனியாகவும் சமைக்க வேண்டியதாகிவிட்டது. பூரி மற்றும் சப்பாத்தி என்று மாற்றி மாற்றிச் சமைத்து அதற்கு சிக்கன், மட்டன் எனச் சமைக்க வேண்டியதாயிற்று.

மாலை டிபனுக்குப் பிரபல ஹோட்டலில் இருந்து தினமும் சிக்கன், மட்டன் உள்ள பிஸா, பர்கர் போன்ற பண்டங்களை வாங்கிக் கொடுத்தேன்.

சலவை செய்ய வாஷிங்மிஷன் வீட்டில் இல்லை. இது புதுப் பிரச்சனையாகத் தோன்றியது. மார்க்ரெட்டுக்காக வாஷிங்மிஷன் வாங்கச் சென்றேன். லட்ச ரூபாய்க்கு நான்கு என்றனர். கால் லட்சத்திற்கு ஒன்று வாங்கினேன்.

பலரின் வீடுகளுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டாள். எங்கள் நண்பர்களின் வீடுகளுக்கு என் மகள் அழைத்துச் சென்றாள். மைத்துனர் வீடுகளுக்கும், என் தங்கை, என் மனைவியின் தங்கை வீட்டிற்கும் நாங்கள் அழைத்துச் சென்றோம்.

அவர்களின் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனித்தாள். என் மகள் சிநேகிதி பிரியா வீட்டில் இரண்டு நாள் சாப்பிட்டாள். பிரியாவின் பெற்றோர்களை அவளுக்குப் பிடித்துப் போய்விட்டது.

என் தங்கை வீடு, என் மனைவியின் தங்கை வீடு என அழைத்துச் சென்றோம். என் மனைவியுடன் வேலை பார்க்கும் ஆசிரியத் தம்பதிகளான கோவிந்தன்- பேபி ஆகியோர்கள் வீட்டிற்கும் அழைத்துச் சென்றோம்.

அங்கிருந்த மயில் பொம்மையைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததைக் கண்ட இருவரும் மறுநாள் காதி கிராப்டில் வாங்கிய மயில் பொம்மையைப் பரிசாகக் கொடுத்துப் போனார்கள்.

ஒரு நாள் இரவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். எங்கிருந்தோ ஒரு பூனை வீட்டின் முன்புறம் உள்ள மரத்தின் வழியாக ஏறி வராண்டாவழியாக வீட்டிற்குள் வந்துவிட்டது.

பூனையைப் பார்த்ததும் அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தன் கைகளை ஆடையில் துடைத்துக் கொண்டு பூனையிடம் செல்ல, பூனை அச்சத்தால் ஓடியதும் இவளும் தொடர்ந்து ஓடினாள்.

எங்கள் வீட்டுக் கம்ப்யூட்டரில் அவளைப் பற்றிய குறிப்பை ஏற்றி வைத்திருக்கிறாள். அதில் அவளுக்குப் பிடித்த விலங்கு பூனை என்று குறிப்பிட்டுள்ளாள். தான் வளர்க்கும் நான்கு பூனைகளைப் பற்றி அடிக்கடி பேசுவாள். குதிரையேற்றம் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

சிறுவயதில் குதிரையில் இருந்து வீழ்ந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதன் அடையாளத்தை எங்களுக்குக் காட்டினாள். அவர்கள் வீட்டில் இருந்த மூன்று குதிரைகளும் நோய்வாய்பட்டு இறந்து விட்டதால், பின்னர் குதிரை வளர்க்கவில்லை என்று கூறினாள்.

அவள் வளர்க்கும் நாயையும் அடிக்கடி நினைவு கொள்வாள். சிறுவயதில் அவள் வளர்த்த நாய் தன் குதிங்காலில் கடித்ததையும் எங்களிடம் கூறி மகிழ்ந்தாள்.

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திருமணவிழாவிற்கு மார்கரெட்டைச் சேலை கட்டி அழைத்துச் சென்றோம். நுழைவாயிலில் ரோஜா மலர் கொடுக்கப்பட்டது.

பெற்றுக் கொண்டவள் பலர் தலையில் ரோஜாவை சூடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தன் கையில் இருந்த ரோஜாவைக் காதில் சொருகிக் கொண்டாள். இதனைக் கண்ட என் மனைவி உடன் அதனை எடுத்து அவள் தலையில் சூடிவிட்டாள். பாப் தலையுடன் இருந்த அவளுக்கு அதுவும் அழகாகத்தான் இருந்தது.

திருமண மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான நிகழ்வுகளை என் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

திருமணப் பெண் பட்டுச் சேலையில் அழகாக இருக்கிறாள் என்று கூறிக்கூறி மகிழ்ச்சியடைந்தாள். பின்னர் மேடைக்கு அழைத்துச் சென்று மாப்பிள்ளை பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

திருமணச் சாப்பாட்டில் பலவேறு உணவுவகைகள் வைக்கப்பட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். இனிப்பைத் தொடவே இல்லை. ஒரு பூரி மட்டுமே சாப்பிட்டாள்.

பொதுவாக நீங்கள் எல்லோருமே அதிக அளவு சாப்பிடுகிறீர்கள் என்றாள். திருமணத்திற்கு வந்த கூட்டத்தினையும் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மணமகள் அணிந்திருக்கும் நகை பற்றியும் ஆச்சரியம் அடைந்தாள்.

மேல்நாடுகளில் திருமணக் கூட்டமும் குறைவாக இருக்கும், திருமண மோதிரம் மட்டுமே அணிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தாள்.

மார்க்ரெட்டின் ஊரான மியாமி – புளோரிடா மாகாணத்தின் தென்கிழக்கில் உள்ளது. நிதி, வர்த்தகம், பொழுதுபோக்கு, கலை என்பவைகளில் சிறந்த நகரமாதலால் ‘குளோபல் சிட்டி’ என்ற பெயரும் அதற்கு உண்டு.

அமெரிக்காவின் சுத்தமான நகரான மியாமியில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பலவேறு விலங்குகளை அவள் பார்த்து இருக்கிறாள்.

யானையைப் பார்த்திருக்கிறாள். ஆனால் தொட்டதில்லை. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றதும் அங்குள்ள யானையைத் தொட்டுப் பார்த்து ஒரே மகிழ்ச்சி. துதிக்கையைத் தடவித் தடவி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

இரவில் வீட்டிற்கு வந்ததும், தந்தை எரிக்சனுக்கும் தாய் லிண்டாவிற்கும் அக்காள் கரோலினாவிற்கும் இ-மெயில் மூலம் அனைத்து விபரங்களையும் மகிழ்ச்சியுடன் அனுப்பியதாக மறுநாள் சொல்லி மகிழ்ந்தாள்.

இந்தியா வருகிற பொழுது என் அம்மா லிண்டா சொல்லி அனுப்பினார்கள், சமையல் செய்வதைப் பற்றித் தெரிந்து வரவேண்டும், வீட்டு வேலைகளில் உதவி செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறி பாத்திரங்களைக் கழுவ முயற்சி செய்தாள்.

ஒரு பிளேட்டைச் சுமார் மூன்று நிமிடம் கழுவி துடைப்பதற்குத் துணி எங்கே? என்று கேட்டாள்.

என் மனைவியோ நாங்கள் துணி வைத்துத் துடைப்பதில்லை. அப்படியே தண்ணீர் வடியக் கவிழ்த்து வைத்து விடுவோம் என்று விளக்கினாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சமையலுக்குத் தேங்காய் அரைப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தென்னை மரங்கள் உள்ளன. அப்பா எனக்குத் திண்பதற்குப் பறித்துத்தருவார்கள்.

தேங்காய் திண்பதற்கு உரியதே தவிரச் சமையலுக்கு அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை என்று கூறினாள். நான் தேங்காய்ச் சில்லைக் கொடுத்ததும் வாங்கிச் சாப்பிட்டாள்.

ஒரு நாள் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என்னிடம் வந்து என் பெயரைக் கூறி தனக்கு தின்பதற்கு தேங்காய் வேண்டும் எனக் கேட்டாள். நான் உடன் ஒரு காயை உடைத்துச் சில்லெடுத்துக் கொடுத்தேன். அவள் அதனை ரசித்து ரசித்துச் சாப்பிட்ட அழகே தனியானது.

அவள் அதிகம் பயன்படுத்திய சொற்கள் இரண்டு ஒன்று ‘தேங்க்யூ’ மற்றொன்று ‘ஓகே’. இரண்டையும் கூறும் பொழுது இனிமையைக் கலந்து கூறுவாள். கிளிமொழி என்பது இந்த தேவதையின் குரல்தான் என நினைத்துக் கொள்வேன்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் தான் மியாமி நகர் உள்ளது. பூக்கள் நிரம்பி ரம்மியமாக இருப்பதால் தான் இதற்கு புளோரிடா என்று பெயராம். அங்குள்ள சர்ச்சுகள் பற்றி கேட்டறிந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளிடம் சர்ச் போக வேண்டாமா? எனக் கேட்டேன். அவள் போவதில்லை என்று கூறினாள்.

அங்கு கத்தோலிக்கர்கள் 26%, புரோட்டஸ்டாண்ட் 48%, யூதர்கள் 3%, மதமற்றோர் 16%, பிற 7% எனக் கூறி, அப்பாவும் அம்மாவும் வேறு வேறு கிருஸ்தவப் பிரிவைச் சார்ந்தவர்கள்.

நான் மதமற்றோர் பிரிவைச் சார்ந்தவள். குழந்தையாக இருந்த பொழுதே சர்ச் சென்றிருக்கிறேன். சர்ச்சுகளும், மதங்களும் செல்வாக்கிழந்து விட்டன எனக் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது.

பக்கத்து வீட்டு நந்தாவும், நந்தாவின் கணவரும் அழைத்ததன் பெயரில் லயன்ஸ் கிளப் தொடர்பான பள்ளிவிழா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். மார்க்ரெட்டைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டனர்.

அமெரிக்காவில் கல்வியின் பல்வேறு படிநிலைகள் பற்றிப் பேசினாள். அவளுக்கு நினைவு பரிசு வழங்கினர். இதனைப் பெரிதும் மகிழ்ச்சியுடன் இரவே பெற்றோர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்து மகிழ்ந்து போனாள்.

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் குடும்பத்துடன் குற்றாலம் – பாபநாசம் – மணிமுத்தாறு சுற்றுலா செல்ல தீர்மானித்து இருந்தோம். மார்கரெட்டிடம் விபரம் கூறியதும், அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி. நானும் வருவேன் என்றாள்.

நான் தனியாக லாட்ஜில் அறை ஏற்பாடு செய்கிறேன் என்றேன். ஆனால் மறுத்துவிட்டாள். உங்களுடன் தங்குவேன் – நீங்கள் சாப்பிடுவதையே நானும் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டாள்.

சகிப்புத்தன்மை அதிகம் வேண்டும் என்றேன். தனக்கு அந்த அனுபவமும், முதிர்ச்சியும் இருக்கிறது என்று கூறினாள்.

ஒவ்வொரு வருடமும் மே முதல் செப்டம்பர் வரை உள்ள விடுமுறையில் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

ஒருமுறை ஆப்பிரிக்காவிற்குச் சென்றபொழுது பிரச்சனை அதிகம் இருந்தது. நிறவேறுபாட்டால் வெள்ளையர்கள் அச்சமுடன் வாழ்ந்தனர்.

நான் ஆப்பிரிக்கா மொழியிலேயே முதுகில் தோள்பட்டையில் ‘நானும் உங்களைப் போல் ஒரு மனித இனம்’ எனப் பச்சைக்குத்திக் கொண்டேன் என்று கூறி அதனைக்காட்டி எந்தப் பிரச்சனையையும் சமாளித்துக் கொள்வேன் என்றாள்.

கல்யாண மண்டபம் ஹாலில் எங்களுடனேயே படுத்துக் கொண்டாள். வாழ்க்கையில் முதல்முறையாக அருவியில் குளித்தாள். அகஸ்தியர் அருவி – காரையார் அருவி – மணிமுத்தாறு அருவி எனக் குளித்து மகிழ்ந்தாள்.

பாபநாசத்தில் ஆற்றில் கும்பலாக நின்ற பெண்களுடன் சேர்ந்து குளித்து புதிய அனுபவத்தைப் பெற்றாள். நாங்கள் சென்ற இடமெல்லாம் ஒரு தேவதை போன்று எங்களுடனேயே வந்தாள். அந்த நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தன.

இரவு எட்டேமுக்கால் மணிக்குத் தன் அறைக்குச் செல்பவள் மறுநாள் காலை மிகவும் சரியாக ஏழரை மணிக்குக் குளித்துவிட்டு ஈரத்தலையுடன் டைனிங் ஹால் வந்துவிடுவாள்.

காப்பி, டீ குடிக்கமாட்டாள். அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையுடன் ஹார்லிக்ஸ், போன்விட்டா, காம்பிளான் என்று மாறி மாறி என் மனைவி கொடுப்பாள்.

நான் இந்து பத்திரிக்கையை அவள் பார்வைக்கு வைத்திருப்பேன். பத்திரிக்கையைப் படித்துக் கொண்டே குடித்து முடிப்பாள். உடன் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டுவிடுவாள். நாங்களும் எட்டேகால் மணிக்கு விடை பெற்று அவரவர் வேலைக்குச் சென்று விடுவோம்.

தன்னைப்போல பிரான்ஸ் – இங்கிலாந்து முதலிய நாடுகளில் இருந்து வந்திருக்கும் சிநேகிதிகளுடன் வாரத்தின் இறுதி நாட்கள் கேரளாவில் உள்ள ஆலப்புழாவிற்கும் – கன்னியாகுமரிக்கும் – மதுரைக்கும் சென்று வந்தாள். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி எங்களிடம் மகிழ்ந்தாள்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செர்வான் என்ற தோழியைத் தன்னுடன் ஒரு நாள் தங்க அழைத்து வரவிரும்பினாள். நாங்களும் அனுமதி கொடுத்தோம். செர்வானும் எங்கள் வீட்டில் தங்கியிருந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

மற்றொருநாள் தோழிகளை இரவுச் சாப்பாட்டிற்கு அழைத்து வருவதாகக் கூறினாள். நாங்களும் ஒப்புதல் கொடுத்தோம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செர்வானும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விக்டோரியா என்ற விக்கியும், அலெக்ஸ் என்ற பெண்ணுமாக மூன்று பேரை அழைத்து வந்தாள். அது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.

நாள்கள் செல்லச் செல்ல மார்க்ரெட் எங்களுடன் ஐக்கியமாகி விட்டாள். எங்கள் உணர்வுகளும் அசைவுகளும் அவளை மையமாக வைத்தே இயங்கின. வேறு எந்தவித நினைவுகளும் இல்லாமல் மார்கரெட் மட்டுமே எங்கள் நினைவில் இருந்தாள்.

என் மகள் அவளிடம் நாம் நண்பர்களாக மாறிவிட்டோம் என்று ஒருநாள் கூறியதும், இல்லை இல்லை சகோதரிகளாக மாறிவிட்டோம் என்று பதில் கூறியதும் எனக்கு ராமன் குகனைப் பார்த்து உன்னோடு ஐவரானோம் என்று பகர்ந்ததே நினைவுக்கு வந்தது. வீட்டில் உள்ள அத்தனை அறைகளிலும் உரிமையோடு உலாவந்தாள்.

நாள்கள் நகர்ந்தன. மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டிய நாட்கள் நெருங்கியது. மியாமியில் உள்ள அவள் வீட்டிற்குச் சென்று பின்னர் ஒரு வாரத்தில் பல ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள கலிபோர்னியாவில் இருக்கும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.

தன் பெற்றோர்களுக்கும், சகோதரி, கரோலினுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கினாள். நாங்களும் உலோகத்திலான யானை, குதிரை, உயர்ரகப் பேனா எனப் பல பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்.

மேலும் ஆங்கிலத்தில் சமையல் குறிப்பு புத்தகம் இரண்டினைத் தேடி பிடித்து வாங்கிக் கொடுத்தோம். அவள் விரும்பிச் சாப்பிட்ட சப்போட்டா, சீத்தாப்பழ‌ விதைகளையும் கொடுத்தோம். அவள் தோட்டத்தில் வைப்பதாகக் கூறினாள்.

உரிய நாள் வந்தது. அவள் மனதிலும் எங்கள் மனதிலும் கவலை அப்பிக் கொண்டது. இரவு எட்டரை மணிக்கு அவளை அழைத்துச் செல்ல வருவார்கள்.

அனைவர் வீட்டிற்கும் மீண்டும் ஒரு முறை போக வேண்டும் என்றாள். என் மகள் அழைத்துச் சென்றாள். என் மைத்துனர் வீடுகளுக்குச் சென்றபின் சிநேகிதி நந்தா வீட்டிற்குச் சென்றாள். அவளும் நினைவு பரிசு கொடுத்து அனுப்பினாள்.

பக்கத்து வீட்டுப் பிரியாவின் பெற்றோர்களிடம் விடை பெற்றுக் கொண்டாள். இரவு ஏழரை மணிக்குச் சாப்பிட அமர்ந்தாள். நாங்கள் அன்று அவளுக்குத் தனிக்கவனம் செலுத்திச் சாப்பாடு செய்திருந்தோம். அவளால் சாப்பிட முடியவில்லை.

பிரிவுத் துயர் தொண்டையை அடைத்தது. அழுதுவிட்டு எழுந்துவிட்டாள். என் மனைவியும், மகளும் ஏன் நானும் அழுது விட்டோம். ஆறுதல் கூறினோம்.

அவள் நான் அமெரிக்கா செல்லப்போவதில்லை. உங்களுடனே இருந்து விடுகிறேன் என்று கூறி அழுதாள். சமாதானமும், ஆறுதலும் கூறி அனுப்பும் பொழுது எங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

அவளை அழைத்துச் செல்ல வாகனம் வந்தது. மனச்சுமையுடன் அவள் சென்றாள். அன்று இரவு மட்டுமல்ல, மறுநாள் காலையும் நாங்கள் சாப்பிடவில்லை. சாப்பிட முடியவில்லை. எங்கிருந்தோ வந்த தேவதை எங்கள் இதயத்தில் குறுகிய நாள் குடியிருந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

மதம், இனம், நிறம், நாடு போன்ற எல்லா செயற்கைச் சுவர்களையும் உடைத்துச் சிதறவைத்துவிட்டது. வணிகம் மட்டுமல்ல, மனிதஉறவும் உலகமயமாகி விட்டது என எங்களுக்கு உணர்த்திவிட்டு, அந்தத் தேவதை ஆகஸ்டு ஆறாம் தேதி இரவு பொதிகையில் சென்று விட்டாள். நெஞ்சிருக்கும் வரை அத்தேவதையின் நினைவிருக்கும்.

சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்