சொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து

மறுநாள் காலை, சுமார் பத்து மணி இருக்கும்…

சொன்னபடியே, ஸ்வாலோ குருவிக் கூட்டத்தை, கடற்கரை ஓரம் இருந்த தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது ரெட்விங்.

பூங்குருவிக் கூட்டத்தில் சுமார் நாற்பது குடும்பங்கள் இருந்தன. அவை ஸ்வாலோ குருவிகளுக்கு சிறப்பான வரவேற்பினை தந்தன.

முதலில் ஸ்வாலோ குருவிக் கூட்டத்தின் தலைவன் இருன்டினிடேவின் சிறப்புகளை தனது கூட்டத்திற்கு எடுத்துரைத்தது ரெட்விங். பூங்குருவிகள் பிரமித்தன.

அதன் பின்னர் சில மூத்த குருவிகளுடன் ரெட்விங்கும் இருன்டினிடேவும் தனியே சென்றன. அங்கு சமகால நிகழ்வுகளை பற்றி அவை பேசத் தொடங்கின.

அவ்வாறே வயதிற்கேப ஸ்வாலோ குருவிகளும் பூங்குருவிகளும் ஒன்று கூடி பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், அந்த இடத்தில் சுற்றி திரிந்து கொண்டும் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தன.

சில குருவிகள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.

வாக்டெய்லும் அதன் நண்பர்களும் மலைக்குன்றின் உச்சிக்கு சென்றன. அங்கிருந்து, பல்வேறு வகையான பறவையினங்கள் கடற்கரையில் குழுமியிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த பறவைகள் பற்றி, பூங்குருவி நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டது வாக்டெய்ல்.

 

ஒரு மணிநேரம் கடந்திருக்கும்.

திடீரென கடற்கரையில் இருந்து பறவைகளின் அலறல் ஒலி பீறிட்டு எழுந்தது. அதனைக் கண்டு வாக்டெய்லும் அதன் நண்பர்களும் பதறின. உடனே இருப்பிடத்தை நோக்கி விரைந்தன.

அதற்கிடையில் பறவைகளின் அலறலைக் கேட்டு ரெட்விங்கும் இருன்டினிடேவும் மர உச்சிக்கு வந்து பார்த்தன.

கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பறவைகள் சிதறிப் பறந்தன. சில பறவைகள் பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன.

தொலைவில் ஒரு படகு கடற்கரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

“நண்பா… அங்க ஏதோ பிரச்சனை போல….” என்றது இருன்டினிடே.

“ஆமா… நண்பா” என்று சொல்லி இருன்டினிடேவை அழைத்துக் கொண்டு கீழே வந்தது ரெட்விங்.

அங்கு எல்லா குருவிகளும் திகிலுடன் கூடியிருந்தன.

அவைகளை பார்த்து, “நண்பர்களே உடனே எல்லோரும் குன்றின் உச்சிக்கு போய் பத்திரமா இருங்க.. நாங்க அங்க போயிட்டு வரோம்” என்று கூறியது ரெட்விங்.

உடனே, “ஐயா, நீங்க அங்க போகனுமா?” என்று சில பூங்குருவிகள் கேட்டன. சில குருவிகளோ, “நீங்களும் எங்க கூட வந்துடுங்க” என்று கெஞ்சின.

ஸ்வாலோ குருவிகளுக்கு எதுவும் புரியவில்லை. பதற்றத்துடன் நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது, “நண்பர்களே, நான் தான் சொல்ரேனே… எல்லோரும் பத்திரமா குன்றின் உச்சிக்கு போங்க” என்று சொல்லி சில நண்பர்களுடன் ரெட்விங் நகர்ந்தது.

உடனே, “நண்பா… நானும் வரேன்” என்று சொல்லி இருன்டினிடேவும் புறப்பட முற்பட்டது.

அதற்கு “இல்ல நண்பா. நீங்க இங்க பத்திரமா இருங்க. அங்க என்ன நடக்கும்னு தெரியாது” என்று ரெட்விங் கூறியது.

“பரவயில்ல நண்பா, நானும் வரேன்” என்று உறுதியுடன் கூறியது இருன்டினிடே.

வேறுவழியின்றி இருன்டினிடேவையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றது ரெட்விங்.

 

ரெட்விங் நினைத்தபடியே, சில பறவைகள் வலையில் மாட்டிக் கொண்டிருந்தன. சுமார் இருபது பறவைகள் இருக்கும். அவற்றின் கால்கள் அங்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் நன்கு சிக்கியிருந்தன.

அவற்றால் வலையிலிருந்து விடுபட இயலவில்லை. அதனால் அவை அலறிக் கொண்டிருந்தன. அருகில் இருந்த எண்ணற்ற பறவைகளும் பதற்றத்தால் நகர்ந்ததால், அந்த இடமே திகிலடைந்திருந்தது.

அப்பொழுது “நண்பர்களே, பயப்படாதீங்க…. அந்த வலையை கிழிச்சி அவங்கள மீட்டுடலாம்” என்று ரெட்விங் கத்தியது.

ஆனாலும் பறவைகள் அங்கும் இங்கும் நகர்ந்துக் கொண்டும் குரல் எழுப்பிக் கொண்டும் இருந்ததால் ரெட்விங்கின் சொற்கள் அவற்றின் காதில் விழவில்லை.

நல்ல வேளையாக, கூட்டம் சற்று கலைந்தது.

வலையில் மாட்டிக் கொண்டிருந்த பறவைகளின் அருகில் இருன்டினிடே உட்பட ரெட்விங்கும் வேறும் சில பறவைகளும் சென்று வலையை அறுக்கத் தொடங்கின.

அவற்றின் செயலை கண்டு பிற பறவைகளும் வலையிலிருந்து சிக்கிய பறவைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டன.

அதற்கிடையில் தொலைவில் தெரிந்த ’அந்தப் படகு’ கடற்கரையை நெருங்கிக் கொண்டிருப்பதை இருன்டினிடே கண்டுக் கொண்டது.

“நண்பா, ஒரு படகு கரைய நோக்கி வருது” என்று ரெட்விங்கிடம் அது தெரிவித்தது.

உடனே, “சீக்கிரம் நண்பர்களே… சீக்கிரம்… படகு கிட்ட வருது” என்று சொல்லி வலையை அறுக்கும் பணியை துரிதப்படுத்தியது ரெட்விங்.

வலையில் இருந்து சில பறவைகள் மீண்டு உயிர் தப்பின.

எதிர்வரும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, ரெட்விங் உள்ளிட்ட பறவைகள் தொடர்ந்து வலையை அறுத்துக் கொண்டிருந்தன.

 

கரையை நெருங்கிக் கொண்டிருந்த ’அந்தப் படகு’ தனது திசையை மாற்றிக் கொண்டு மீண்டும் கடற்பகுதிக்குள் வேகவேகமாக சென்றது.

அதனை பார்த்த இருன்டினிடே, “நண்பா ’அந்த படகு’ திசைமாறி போகுது… கரைக்கு வரல” என்று ரெட்விங்கிடம் கூறியது.

ரெட்விங் மேலெழுந்து பார்க்க, மற்றொரு கப்பல், அந்தப் படகை விரட்டிக் கொண்டு செல்வது தெரிந்தது.

ஆம்… வேட்டையர்களை பிடிப்பதற்காக, ரோந்து கப்பல் ஒன்று ’அந்தப் படகை’ துரத்திக் கொண்டு செல்கிறது. அதை புரிந்து கொண்டது ரெட்விங்.

இனி ஆபத்து இல்லை. ஆதலால், “நண்பர்களே, அந்த படகு இங்க வரல. அவசரப்படாம வலைய அறுக்கலாம்” என்று அங்கிருந்த பறவைகளிடம் ரெட்விங் கூறியது.

கடின போராட்டத்திற்கு பின், வலையில் சிக்கியிருந்த எல்லா பறவைகளும் உயிருடன் மீட்கப்பட்டன. எனினும் சில பறவைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.

அவற்றிக்கு தேவையான சிகிச்சையினை அங்கிருந்த பறவைகள் செய்தன. அதனை தொடர்ந்து அங்கு அமைதி திரும்ப தொடங்கியது.

“நண்பர்களே, இப்ப நாம் புறப்படலாம்” என்று கூறி இருன்டினிடேவையும் பூங்குருவி நண்பர்களையும் அழைத்துக் கொண்டு இருப்பிடத்தை நோக்கி பறந்தது ரெட்விங்.

 

முன்னதாக குருவிகள் எல்லாமும் அங்கு வந்திருந்தன.

“யாருக்கும் ஒன்னும் ஆகலையே” என்று சில குருவிகள் கேட்டன.

“ஒன்னும் இல்ல… எல்லாம் நல்லா தான் இருக்கோம்…” என்று கூறியது ரெட்விங்.

“அங்கு, என்ன நடந்தது ஐயா” என்று வாக்டெய்லும் அதன் நண்பர்களும் கேட்டன.

“சில பறவைகள் வலையில மாட்டிகிட்டாங்க! அதான் பிரச்சனை” என்றது ரெட்விங்.

“வலையா… அது எப்படி இங்க வந்துச்சு?” என்று ஏதுவும் புரியாமல் கேட்டது வாக்டெய்ல்.

“ஆமாம். நம்மல வேட்டையாடுவதற்காக வலைய இங்க மறச்சு வச்சிருக்காங்க… அதுல தெரியாம பறவை நண்பர்கள் சிலபேரு மாட்டிகிட்டாங்க” என்றது ரெட்விங்.

“ஐயா, யாரு அந்த வலைய இங்கு வச்சது? எதனால பறவைகள வேட்டையாடுராங்க? தெரிஞ்சுக்கலாமா” என்றது வாக்டெய்ல்.

“உம்ம்… சொல்றேன். சில மனிச‌ங்க தான் அந்த வலை வச்சுருக்காங்க… அவங்க விளையாட்டுகாகவும், உணவுக்காகவும் நம்மல வேட்டையாடுறாங்க. நமக்கு வேட்டை ஆபத்து எப்போதும் உண்டு. நாம்தான் கவனமா இருக்கணும்” என்று கூறியது ரெட்விங்.

“ஐயா…  வேட்டை ஆபத்து இல்லாம‌ தடுக்க முடியாதா?” என்று கேட்டது வாக்டெய்ல்.

“நம்மல மாதிரி பறவைகளை காப்பாற்ற அரசாங்கம் பல சட்டங்கள போட்டிருக்கு. அத்தோட நல்ல மனம் கொண்டவர்களும் பறவைகள பாதுகாக்க எத்தனையோ முயற்சிகளை செய்யுறாங்க. ஆனாலும் சில வேட்டையர்களால நமக்கு இது மாதிரி வேட்டை ஆபத்து வரத்தான் செய்யுது” என்று ரெட்விங் கூறியது.

வாக்டெய்ல் ஒன்றும் சொல்லவில்லை.

 

அப்பொழுது மதியம் ஒரு மணி ஆகியிருந்தது. ஆதலால் “சரி நண்பர்களே, எல்லாம் சாப்பிட வாங்க” என்று ஸ்வாலோ குருவிகளை அழைத்தது ரெட்விங்.

அவை ஒன்றும் சொல்லவில்லை. “இல்ல நண்பா, கொஞ்ச நேரம் போகட்டும்” என்று இருன்டினிடே கூறியது.

சிறிது நேரம், கடந்தகால வேட்டை ஆபத்து பற்றிய செய்திகளை பூங்குருவிகள், ஸ்வாலோ குருவிகளிடம் பகிர்ந்துக் கொண்டன.

எல்லாம் வேதனையுடன் கேட்டுக் கொண்டன. எனினும் சற்று நேரத்தில் அவை எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பின.

அப்பொழுது, மதியம் இரண்டு மணி ஆகவே, குருவிகளை உணவு உண்ண அழைத்தது ரெட்விங்.

அதனையடுத்து, ஸ்வாலோ குருவிகள் உணவு உண்டன. பின்னர் பூங்குருவிகளும் உண்டு முடித்தன.

“சரி நண்பா அப்ப நாங்க புறப்படட்டுமா… இன்று இரவு மீண்டும் பயணத்தை தொடரனும்” என்று ரெட்விங்கிடம் கூறியது இருன்டினிடே.

“என்னப்பா… ஒரு வாரம் இங்கு இருந்துட்டு போங்கன்னு சொன்னா கேட்கமாட்றீங்களே” என்று உரிமையுடன் சொன்னது ரெட்விங்.

“இல்ல நண்பா… இன்னும் கொஞ்ச தூரம் தான்… சொர்க்க வனத்துக்கு போயிட்ட, அப்புறம் எல்லாம் நிம்மதியா ஆறுமாசத்துக்கு ஓய்வு எடுப்பாங்க…..” என்று சொன்னது இருன்டினிடே.

“சரி நண்பா… ஆனா நீங்க இங்கயே தங்கி இரவு உணவு எடுத்துக்கிட்டு புறப்படலாமே.” என்று ரெட்விங், கூற இருன்டினிடேவும் அதனை ஏற்றுக் கொண்டது. அதனால் எல்லா குருவிகளும் மகிழ்ச்சியடைந்தன.

மீண்டும் வயதிற்கேற்ப பூங்குருவிகளும் ஸ்வாலோ குருவிகளும் ஒன்றுக் கூடி மகிழ்ச்சியாக அன்றைய பொழுதை கழித்தன.

நேரம் சென்றதே தெரியவில்லை. இரவு பொழுதும் வந்துவிட்டது.

திட்டமிட்டபடி, இரவு உணவு உண்டபின் ஸ்வாலோ குருவிகள் புறப்பட தயாராகின.

“நண்பா… நாங்க புறப்படும் நேரம் வந்துடுச்சு. உங்களுக்கு மிக்க நன்றி” என்று ரெட்விங்கை பார்த்து கூறியது இருன்டினிடே.

பின்னர் அது எல்லா பூங்குருவிகளையும் பார்த்து வணங்கியது. பதிலுக்கு பூங்குருவிகளும் வணக்கத்தை தெரிவித்தன.

“நண்பர்களே… நல்லபடியா எல்லோரும் போயிட்டு வாங்க” என்று கூறியது ரெட்விங்.

பின்னர், அன்புடன் பூங்குருவிகள் எல்லாம் ஸ்வாலோ குருவிக் கூட்டத்தை வழியனுப்பி வைத்தன.

சொர்க்க வனம் நோக்கி, பயணத்தை தொடர்ந்தது ஸ்வாலோ குருவிக் கூட்டம்.

 

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 10 ‍- நண்பர்களின் உரையாடல்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.